பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

முகவுரை

கல்வெட்டுக்களைப் படியெடுத்தல், செப்பேடுகளைத் தேடிக் காண்டல் இன்னோரன்ன செயல்களால், பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிப் பேராசிரியராகத் திகழ்ந்தவர்; செந்தமிழில் சீரிய புலமை பெற்றதோடன்றிச் சைவ சித்தாந்தத் திலும் நுண்மாண் நுழைபுல மிக்கவர்; தமிழ் உணர்வுள்ள நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கியவர். தமிழ் இலக்கியவரலாறு, பண்டைக் காலத் தமிழ் மன்னர் வரலாறு போன்ற அரிய நூல்களை ஆக்கியவர்; பல்வேறு நூல்கட்கு உரைநயம் கண்ட உரவோர்; ஊர்களின் உண்மைப் பெயர்களைத் தக்க சான்றுகளுடன் நிறுவியவர், நாநலம் மிக்கவர் எழுதுவது போலவே பேசுவதும், பேசுவது போலவே எழுதுவதும் செய்யவல்லவர்! உயர்நிலைப்பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் எனப் பல்வேறு நிலைகளில் பணிபுரிந்து கொண்டே இரவெல்லாம் கண்விழித்து ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதிக் குவித்தவர்; ஆங்கிலத்திலும் போதிய புலமை பெற்றவர் வடமொழியும் அறிந்தவர் தாம் வாழ்ந்த காலத்திலேயே ‘சித்தாந்த கலாநிதி’, ‘உரைவேந்தர்’, ‘தமிழ்ச்செம்மல்’ எனும் தகைசால் பட்டம் பெற்றவர்! ‘ஒளவை'யைக் கண்ணாற் கண்டோமில்லை; இந்த ஒளவையைக் காண முடிந்ததே என்று பலரும் மகிழ்ந்து போற்றும்படி வாழ்ந்தவர் ஆம்! அவரே, உரைவேந்தர்’ ஒளவை சு.துரைசாமி பிள்ளை.

‘தோன்றிற் புகழொடு தோன்றுக’

என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கேற்ப வாழ்ந்தவர்!

இத்தகு சான்றோரோடு 1951ஆம் ஆண்டு முதல் நட்புக் கொள்ளும் பேறு எனக்குக் கிட்டியது. அவரினும் வயதில் இளையவனே எனினும், என்னையும் ஒருபொருட்டாகக் கருதி என்பால் பேரன்பு காட்டிய பெருந்தகை! யான், மதுரைத் திருவள்ளுவர் கழகத்துச் செயலாளராக இருந்தபோது, சைவ சித்தாந்தக் தொடர் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்ததோடு, அவரது அறுபதாவதாண்டு மணிவிழாவைச் சிறப்புறக் கொண்டாடவும், அதில், 'உரைவேந்தர்' என்னும் உயரிய பட்டத்தை வழங்கவுமான நிகழ்ச்சி நடந்ததை இன்று நினைத்தாலும் எனதுள்ளம் பூரிப்புக் கொள்கிறது.

இத்தகு தொடர்பு என்பால் இருந்தமையால், இவரது இனிய வாழ்க்கை வரலாற்று நூலினை எழுதும் பொறுப்பைப் புதுதில்லி, ‘சாகித்திய அகாதெமி’ எனக்களித்ததைப் பெருமையாகக் கருதுகின்றேன்.