பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

 குழந்தையை வெறுத்து அதற்கு நஞ்சூட்டிக் கொல்வதின் மூலம் தன்னையே சிதைத்துக் கொள்ளும் கொடுமை இன்று இயல்பாக நிகழ்கிறது. இந்த நிலையில், நம் புராணங்கள், கதைகள், காவியங்கள், அவற்றில் மறைமுகமாகக் கூறப்பட்டிருக்கும் அறிவுக்குப் பொருந்தாத தகவல்கள், விவரங்கள் ஆகியவற்றை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற சிந்தனை எழுகிறது. அத்தகைய ஒரு தூண்டுதலின் விளைவே இந்நூல். இதில் கட்டுரைகளைத் தவிர, நாம் வாழும் காலத்தில் வாழ்ந்து மறைந்த இரு அபூர்வமான அரிய பெண்மணிகளைப் பற்றிய சிறு சொற்சித்திரங்களையும் உங்கள் முன் வைக்கிறேன்.

யாரையும் குறை கூறவோ, அல்லது வருத்தவோ இந்த எழுத்துக்களை நான் நிச்சயமாக உருவாக்கவில்லை. பெண் என்ற நோக்கில் கனிந்துவரும் ஆதங்கத்தின் உந்துதலில் இப்படியும் பார்க்க வேண்டும் என்று இந்நூலை உருவாக்கியுள்ளேன். இந்த நூலைக் கொண்டுவரும் தாகம் திரு. அகிலன் கண்ணன், திருமதி மீனா இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. வாசகர் இதை எப்போதும் போல் ஏற்று ஆதரிக்க வேண்டுகிறேன்.

-ராஜம் கிருஷ்ணன்