உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



II


ஆண்டாள்...

சூடிக் கொடுத்த சுடர்க் கொடி...

கோதை நாச்சியார்...

பூமாலை மட்டுமின்றி பாமாலையும் புனைந்து கொடுத்த திருமகள்.

இந்தப் பெருமகள் மண்ணில் உலாவிய காலம் எட்டாம் நூற்றாண்டின் இடைப்பட்ட பகுதி என்று வரலாற்றறிஞர் கணிக்கின்றனர்.

வடநாட்டிலே உதித்த மீரா இன்னும் எட்டு நூற்றாண்டுகள் பிற்பட்டவர். மீரா அரச குடும்பத்தில் பிறந்து, அரச குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டு, கண்ணனையே நாயகனாகக் கருதி, தன்னை அவனுக்கு ஆட்படுத்தியவள். அதன் காரணமாக அவள் அடைந்த துன்பங்கள் அனைத்தையும், கண்ணனின் பால் ஆழ்ந்த காதலாக்கிக் கொண்டவர். அந்த வேதனைகளும் தவிப்புகளும், விடுதலை பெற்றுப் பேரானந்தத்தில் இலயிக்கத்துடிக்கும் ஆன்மாவின் தவிப்பாகப் பாடல்களில் பிரதிபலிக்கின்றன.

ஆனால், ஆண்டாளின் பிறப்பே, சீதை எனும் காவிய நாயகியின் பிறப்பைப் போன்ற மருமமாக இருக்கிறது. சீதை காவிய நாயகி எனவே ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்ட விஷயம் என்று விட்டுவிடலாம். ஆனால் இந்தக் கோதையோ, திருப்பாவை முப்பது பாசுரங்களையும் நாச்சியார் திருமொழி 143 பாசுரங்களையும் அருளிச் செய்த பெருமாட்டி. இவள் மண்ணிலே உலவி, அக்கால வழ்வைத் தன் பாசுரங்களில் பிரதிபலிக்கச் செய்தவள். கண்ணனையே எண்ணி மறுகித் தன் உணர்வுகளை அழகு தமிழில் பாசுரங்களாக வடித்த