பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/108

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

இந்திய சமுதாய... /நாயகரைப் பாடிப் பரவிய நாயகியர்


நூற்றாண்டுகள் சென்றபின் வடகன்னடப் பகுதியில் இப்போதைய ஷிமோகாவுக்கருகில் ‘உடுதாடி’ என்ற கிராமத்தில் தோன்றினார். வீரசைவ மரபில் தோன்றிய இவருடைய பெற்றோரே, சிவபக்தச் செல்வர்கள். இவர்கள் தம் அருஞ்செல்விக்கு, இளமையிலேயே, அறிவுக் கல்விக்கான ‘சிட்சை’ யும் ஞானப்பயிற்சிக்கான ‘லிங்க தீட்சை’யும் ஒருங்கே அளித்தனர். அதே கிராமத்தில் கோயில் கொண்டிருந்த சென்னமல்லிகார்சுனரையே இவர் இஷ்ட தெய்வமாகக் கொண்டார். இவருடைய காலமும் காரைக்காலம்மையின் வாழ்காலம் போன்று, பிரமணர் ஆதிக்கத்தை எதிர்த்துக் கொண்டு செல்வாக்குப் பெற்று வந்த சமண ஆதிக்கத்தை ஒடுக்கும் முகமாக, வீரசைவ பக்தி இயக்கம் பேரூன்றிப் பரவிய காலமாக இருந்தது. பஸவண்ண, அல்லம ப்ரபு போன்ற ஞானிகள் வாழ்ந்த காலம் அது.

இளமையிலேயே சிவபக்தச் செல்வியாக விளங்கிய அக்கமாதேவி, திருமணப் பருவம் வந்தபோது, இகஉலக வாழ்வு பற்றிய சிந்தனையே இல்லாதவராகவே இருந்தார். உலகியல் வாழ்வுக்கப்பால், தம்மை சென்ன மல்லிகார்ச்சுன சுவாமிக்கு அர்ப்பணித்தவராய், ஞான வழியிலேயே தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.

ஆனால், உரிய பருவத்தில் பேரழகுடன் திகழ்ந்த இவளுக்குத் தகுந்த வரனைத் தேடி மணமுடிக்க வேண்டும் என்று பெற்றோருக்குக் கவலை இல்லாமல் இல்லை. எனினும் செல்வியை எந்த நிலையிலும் கட்டுப்படுத்தி அவளைத் துன்புறச் செய்யும் பெற்றோரும் இல்லை அவர்கள்.

இந்தத் தருணத்தில் எதிர்பாராதது நிகழ்ந்துவிட்டது. வீதி உலாவந்த கெளசிக மன்னன், உடுதாடியைத் தன் இருப்பிடமாகக் கொண்டு ஆண்டு வந்தவன், இந்தச் சிவ மங்கையின் பேரழகினைக் கண்டுவிட்டான். மையல்