பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

இந்திய சமுதாய... / இலட்சிய இந்தியப் பெண்மை


இவர் ஊக்கமளித்திருந்தார். அமரகவி பாரதிக்கு தேசியம், பெண் உரிமை, சமத்துவம் என்ற கணற்பொறிகளை இதயத்தில் தோற்றுவித்தவர் இப்பெருமாட்டி இவள் பிற்காலத்தில் தம்மை, வெறும் சகோதரி என்ற குறிப்பிட்டுக் கொண்டாரே ஒழிய, ‘துறவற நெறியைச் சேர்ந்தவர்’ என்று சேர்த்துக் கொள்ளவில்லை. ஏனெனில் துறவற ஒழுங்கில் தீவிர வாதம் முரண்பாடாகி விடும்.

எனவே விடுதலைக்கு முந்தைய பெண்கல்வியில், அவளது தனித்த ஆளுமை ஆற்றல் குறிப்பாக மையப் படுத்தப்படவில்லை. தேசியம் நமது பெண்ணரசிகள் - சீதை, சாவித்திரி, நளாயினி... என்ற கற்பரசி மரபுகள் தேசிய சிந்தனைக்குத் தேவைகளாக இருந்தன. மேலை நாட்டிலே, கற்புமரபு இல்லை. அங்கு தியாகத்துக்கு முதலிடம் இல்லை. போகத்துக்கே முதலிடம். எனவே, தேசிய உணர்வைத் தோற்றுவிக்க, பெண் முன்னேற்றம், கற்பரசிகளின் பெருமைகளிலேயே நிலைத்திருக்க வேண்டி இருந்தது.

‘ஆண், குடும்பத்துக்கு வெளியே சென்று பொரு ளீட்டும் பொறுப்பில் உள்ளவன். எனவே அவனுக்கு, அதற்குகந்த தொழிற்கல்வி, பிறமொழிப்பயிற்சி அனைத்தும் தேவை. பெண் குடும்பத்தில் இருப்பவள். அவளுக்கு எளிமை, சிக்கனம் என்ற பண்புகளுடன் குடும்பத்தைச் செவ்வனே நடாத்திச் செல்லவும், குழந்தைகளை நன்கு வளர்ப்பதற்குமான கல்விப்பயிற்சி போதும். தாய்மொழிக் கல்வியே உகந்தது’ என்று காந்தியடிகள் கருத்துரைக்கிறார். எழுத்தறியாமை என்ற சாபக்கேட்டிலிருந்து வெளிவந்த பின்னரே, தேசியப் போராட்டத்தில் பெண்கள் ஆண்களுக்கு இணையாகப் பங்காற்ற முடியும் என்ற வாதத்தைக் கூட அவர் ஏற்றிருக்கவில்லை. பெண்களிடம் இயல்பாக அமைந்துள்ள பொறுமை, உறுதி, தியாகம் ஆகியவையே தேசியப் போராட்டத்துக்கு உகந்த சிறப்பான பங்களிப்பைச் செய்யப் போதுமானது என்று கருத்துரைக்கிறார்.