பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/128

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

இந்திய சமுதாய... /இலட்சிய இந்தியப் பெண்மை

 தென்னாப்பிரிக்க ஆங்கிலப் பள்ளிக்கும் அனுப்பவில்லை; இந்தியாவுக்கும் கல்வி பெற அனுப்பவில்லை. சோதனைகளுக்கு அவர்களை உள்ளாக்கினார். பிள்ளைகளைக் கை இயந்திரத்தில் மாவரைக்கவும், கழிப்பறைகளைச் சுத்தம் செய்யவும் பணித்தார். நண்பர்களும் பல்வேறு சமயத்தினரும் அடங்கிய ஆசிரமம் போன்ற பெரிய ‘குடும்பத்தில்’ எல்லோருமே உழைக்க வேண்டும். கஸ்தூரிபாய்க்குச் சமையல் வேலையே சரியாக இருந்தது.

இத்தகைய கட்டாயங்களினால் மூத்த பையன், தந்தையை வெறுத்தான். அடியோடு பிரிந்து சென்றான். ஒரு தாய் என்ற நிலையில் கஸ்தூரிபாயின் சோகம் வெளிப்படாமலே போயிற்று.

இதே போல கஸ்தூரிபாய் உடல்நலம் சீர்கேடுற்று, இரத்த நஷ்டத்தினால் மிகமெலிந்து நலிந்த போது, இறைச்சி ரசம் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர் கருதிய போதிலும் அதை காந்திஜியிடம்தான் தெரிவித்தார். அவர் அப்போது, ஜோஹன்ஸ்பர்க்கில் சத்தியாக்கிரஹ இயக்கம் தொடங்க முன்னேற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார். கஸ்தூரிபாய் டர்பன் நகரில் டாக்டரின் பராமரிப்பில் இருந்தார். கஸ்தூரிபாய் தீண்டாமையை அநுசரிக்கக் கூடாது என்று வெளியே பிடித்துத் தள்ளத் துணிந்த அவர், இறைச்சி ரசம் கொடுப்பதற்கு கஸ்தூரிபாய் விரும்பினாலன்றிக் கொடுக்க வேண்டாம் என்று பணித்தார்.

மாட்டிறைச்சி ரசம் குடிக்க நிச்சயமாகக் கஸ்தூரிபாய் இணங்க மாட்டாள். இவர் கட்டுப்படுத்தவில்லை. ஆனால் ஆரோக்கியம் கருதி டாக்டர் கொடுக்க வேண்டும் என்பதை இவரால் ஒத்துக் கொள்ள முடியவில்லை என்பது வெளிப்படை சமயவெறியோ, எதுவோ இங்கே மறை முகமாகக் கட்டுப்படுத்துவது தெரிகிறது. கஸ்தூரிபா இறைச்சி ரசம் கொள்ள முடியாது என்று மறுத்துவிட்டார்.