பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

131


அவளை முடக்கி உள்ளே பின் இழுத்துத் தள்ளுவதுமான ஒருசமுதாயத்தில், இந்திரா எவ்வாறு முதன்மைத்தகுதிக்கு உயர முடிந்தது?

2

நேரு குடும்பமும் ஆணைப் போற்றும் பாரம்பரியக் கருத்துக்களுக்கு அப்பாற்பட்டதல்ல. தன் உழைப்பால், விடாமுயற்சியினால், வழக்கறிஞர் தொழிலில் சிறந்து, உயர்ந்து மிகுந்த செல்வம் ஈட்டிய மோதிலால் நேரு, இந்திராவின் பாட்டனார். அந்தக் காலச் சமுதாய மதிப்பின் படி, வெள்ளைக்காரருக்குச் சமமாக வாழ்வதே தருமம் என்று வாழ்ந்து காட்டிய மோதிலால் நேருவின் ஒரே ஆண் வாரிசு, ஜவாஹர்லாலின் ஏகபுத்திரி இந்திரா நேரு.

தம் ஒரே மகன் ஜவாஹர்லாலின் அன்பு மனைவி கமலா கருவுற்றிருக்கிறாள் என்றறிந்த நாளிலிருந்த, தாய் ஸ்வரூப ராணி, பேரப்பையனைப் பற்றிய கனவுகளில் மிதந்தது வியப்பில்லை. அந்தப் பெரிய ஆனந்த பவன் மாளிகையிலுள்ள அனைவரும், உறவினர், பணியாட்கள் ஈறாக, வீட்டு மகனுக்கு ஓர் ஆண்வாரிசு உதயமாவதை எதிர்பார்த் திருந்தனர்.

குடும்பத்தை ஒட்டிய மிக முதியவரான முன்ஷிமுபராக் அலி, தம் மரணப் படுக்கையிலும், ஜவாஹரின் அருமைப் புதல்வரைக் கையிலேந்தி ஆசிமொழியக் காத்திருந்தார். பிறந்த உடனேயே சிசு, முதியவரின் ஆசிகளுக்குக் கொண்டு வரப்பட்டது.

முதியவர், சிச பெண் என்பதை உணராமலேயே, “ஜவாஹரின் இந்த அருமையான வாரிசு, குலக் கொழுந்து, அல்லாவின் அருளால் எல்லா மேன்மைகளையும் பெற்று நீடுழி வாழட்டும்!” என்று கையில் வாங்கி வாழ்த்தினார்.