பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

133


நடை உடை, பாவனைகளை விட்டு, ஐரோப்பிய நாகரிகங்களைப் பின்பற்றும் மாற்றம் ஏற்பட்டது.

இப்போதோ இரண்டாவது புரட்சி ஓர் அலைபோல் இந்த ஆனந்த பவன மளிகையைத் தன் வசமாக்கிக் கொண்டது. பலவீனமாக இருந்தாலும் தாய் கமலாநேரு கதர்ப்பிரசாரத்தில் முழுதுமாக ஈடுபட்டார். சத்யாக்கிரக இயக்கத்தில் இளைஞரைச் சேர்ப்பதும் இவர் பணியாயிற்று. வீட்டில் மற்ற அனைவருமே பரபரப்புடன் தேசிய இயக்கத்தில் முழுகினர்.

சிறுமி இந்திரா, தன் புத்தகம், தன் பொம்மைகள் என்று தனக்குள் ஓர் உலகை ஏற்படுத்திக் கொண்டே தனிமையில் தான் வளர்ந்தாள். ஒரு சமயம் தொடக்கக் கல்வி கற்பித்த ஓர் ஆசிரியை சிறுமி இந்திராவிடம் “நீ பெரியவளாக வளர்ந்தபின், டீச்சராவாயா, டாக்டராவாயா, அல்லது வேனிஸ் வர்த்தகன் கதையில் வருவது போன்ற சாதுரியம் மிகுந்த நீதிபதி ஆவாயா?” என்று கேட்டார்.

அதற்கு இந்திரா, “நான் ஃபிரஞ்சு மங்கை ஜோன் அஃப்ஆர்க், போலாவேன்!” என்று மொழிந்தாள்.

அந்த இளம் வயதில் தியாகமாகிய ஆதரிசம் இவளுள் முதிர்ந்திருந்தது.

3

தியாகம், தேசநலன் என்ற வேட்கைகள் இந்தச் சின்னஞ் சிறு பெண்ணுக்கு எப்படித் தோன்றின?

மோதிலாலின் அருமைப் பேத்திக்கு எத்துணை அரிய பரிசுகள்!

வெளிநாட்டிலிருந்து வந்த விதம் விதமான பொம்மைகள், உடைகள் என்று எத்தனை அருமைகள், மற்றவர் பொறாமைப்படும்படி வாய்த்திருந்தன?