உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

இந்திய சமுதாய.../போராட்டப் பெண்மை


ஒருகால் வேறு மாதிரி உருவாகியிருந்திருக்கலாம். அப்படி யிருந்திருந்தால் இந்திராவுக்குத் தன்னை உறுதியாக நிலைப் படுத்திக் கொள்வதே முதன்மை பெற்றிருக்காது. தன் பதவிக்கு எப்போதும் ஊறு வந்துவிடலாம் என்ற உணர்வே எப்படியேனும் அந்த நிலையை வெல்ல வேண்டும் என்ற தீவிரத்துடன் செயல்பட வைக்கிறது, இந்திரா ஒரு சர்வாதிகாரிபோல் செயல்பட்டார் என்றால், அது இந்த பயத்திலிருந்தே துவக்கமாகிவிட்டதெனலாம்.

1969 நவம்பரில், மூத்த அணியினரான காங்கிரஸ், இந்திராவைக் கட்சி நீக்கம் செய்தது. இந்திரா அதே மூச்சுடன் தன் இளைய அணியினரின் பலத்தில் ‘இந்திரா காங்கிரஸ்’ என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்தார்.

இவருடைய பிம்பம், சாமானிய மக்களின் தெய்வமாக உருவகமாயிற்று. சுறுசுறுப்புடன் மக்களுக்குத் தேவையான முன்னேற்றத் திட்டங்களைக் கொண்டுவரும் காங்கிரஸ் கட்சி இவருடையதே. அந்த மூத்த காங்கிரஸ் செயலிழந்த மாடு, ஊழல் மலிந்தது, ஓட்டமில்லாதது என்று மக்களிடையே பதிவு பெற்றன.

இந்த ஆரம்பம், இந்திரா-இந்தியா என்ற துதிபாடுபவர் கட்சியாக, காங்கிரஸ் வலிமை பெற்றது. அதுகாறும் கட்சிக்குள் ஜனநாயகப் பண்பின் சில இழைகளேனும் எஞ்சி யிருந்தாலும், அவையும் சுத்தமாக இல்லாமலாகிவிட, காலப்போக்கில் கட்சி அரசியலே இந்திரா, அவர் குடும்பம் என்ற பரிணாமம் பெற்றது.

ஆனால் இக்காலங்களில் இந்திரா இந்திய நாட்டின் தலைவர் மட்டுமில்லை, உலகத் தலைவர்களில் ஒருவர் என்று கருதப்படும் அளவுக்கு முன்னேற்றம் கண்டார்.

முக்கியமாக, 70-71இல் ஏற்பட்டது பங்களாதேஷ் பிரச்னை. இந்தப் பிரச்னையை, வெகு சாமார்த்தியமாகவும் தீரத்துடனும் அணுகித் தீர்வு காண்பதில் வெற்றி கண்டார்.