ராஜம் கிருஷ்ணன்
165
அமெரிக்கா, சோவியத் நாடு ஆகிய இரு வல்லரசுகளுக்கும் இடையே நட்புறவு, கூட்டுச் சேராக் கொள்கை என்ற கொடியைத் தூக்கிப் பிடித்து, உலக நாடுகளுக்கிடையே இந்தியாவின் புகழை ஏற்றி வைத்தார். ‘பங்களாதேஷ்’ பிறந்து, வெற்றி கண்டதும் இந்திரா, “பாரத ரத்னா” என்ற அரிய கெளரவத்துக்கும் உரியவராகப் புகழின் உச்சியில் ஒளிர்ந்தார்.
இந்த உச்ச நிலையை, காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் தந்திரத்துடன் பயன்படுத்திக் கொண்ட இந்திரா அரசைக் கலைத்து ஓராண்டுக்கு முன்பாகவே பொதுத் தேர்தலை அறிவித்தார்.
அரசியல் அரங்கில் அன்னை இவ்வாறு மூச்சுவிட நேரமின்றி இயங்கிய காலத்தில், மூத்த புதல்வன் ராஜீவ், தன் இத்தாலியக் காதலி சோனியாவை 1968இல் மணந்து கொண்டிருந்தான். 1970-ம் ஆண்டில் ஓர் ஆண் குழந்தைக்கு தந்தையானான். 1971-ம் ஆண்டில் பொதுத் தேர்தலின் போது, சோனியா அடுத்த குழந்தையை எதிர்பார்த்திருந்தாள். ராஜீவ், மாதச் சம்பளம் பெறும் விமான ஓட்டியாகப் பணிபுரிந்து கொண்டு, பிரதம மந்திரியின் மாளிகையில் குடும்பம் நடத்தினாலும், அரசியல் வாடையே படலாகாது என்று ஒதுங்கியிருந்தான்.
சஞ்சயோ, எந்த ஒரு தயக்கமோ தடையோ இல்லாமல் அரசியல் பிரவேசம் செய்திருந்தான். தன்னைத் தட்டிக் கேட்பார் யாரும் கிடையாது என்றும் அனைவருக்கும் புரிய வைத்துக் கொண்டிருந்தான். 1970-ம் ஆண்டின் இடைக் காலத்தில், மனேகா அவன் மனைவியாக இந்திராவின் இல்லத்தில் புகுந்திருந்தாள்.
கணவனும் மனைவியும் அரசியலில் சிகரக் கொடியைப் பற்றும் உந்துதலும் வேகமும் கொண்டிருந்தனர். அவர்கள் முழுமூச்சுடன் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது,