பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/168

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

இந்திய சமுதாய... /போராட்டப் பெண்மை


இந்திரா ஊக்கமாகவே இருந்தார். இந்த இளைய மைந்தனின் அடாவடித்தனம் கவலையையும் தலை வேதனையையும் கொடுத்திருந்த காலம் இல்லை இது. அரசியல்களில் வெற்றிக்குத் தேவையான துணிவும் இது தான் என்றும், சஞ்சய் இதற்கே உகந்தவன் என்றும் ஆமோதித்து அவனை ஏற்றுக்கொண்டாக வேண்டியதாகி விட்டது. அவனைத் தடுக்கவும் தவிர்க்கவும் சக்தியில்லாத தாய்மை, அவனுடைய போக்கை நியாயப்படுத்திக் கொண்டது.

10

இந்திரா 1971 தேர்தலில் அமோக வெற்றியைப் பெற்றார். 1967ம் ஆண்டுத் தேர்தலில் பிரதம மந்திரிப் பதவிக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்து கொள்ளும் வெற்றியைப் பெற்றார். ஆனால், 71ம் ஆண்டுத் தேர்தல், மூத்த அணியினிடமிருந்து பிரிந்து, ‘தானே’ கட்சியின் சக்தி என்ற உறுதியை நிலை நாட்டிக் கொள்ளும் வெற்றியாக அமைந்தது. 1967 இல் பிரிக்கப்பட்டிராத காங்கிரஸ் பெற்ற இடங்களைக் காட்டிலும் எழுபது இடங்களைக் கூடுதலாக வென்று, ‘ஏக சக்ராதிபதி’ என்ற உயர்நிலையை எட்டினார்.

மூத்த தலைவர்களின் கூட்டணி இருந்த இடம் தெரியாமல் போயிற்று. இந்த வெற்றியில் சஞ்சய் தன் பங்கை விட்டுவிடுவானா? உயர் பதவிக்குரிய அதிகாரங்களை எடுத்துக் கொண்டு மனம் போனபடி பயன்படுத்திக் கொள்ளலானான். அவனுடைய மமதையும் துணிச்சலும் காட்டுத்தனமான ஆணைகளும், இந்திய அரசின் அநுபவம் வாய்ந்த மூத்த அதிகார வருக்க அலுவலரையும் துச்சமாகத் துக்கியெறியக் கூடியவையாக இருந்தன.

ஒரு ஜனநாயக அரசுக்கு, ஒரு தனி நபரிடம் இவ்வாறு அதிகாரம் குவிவது, பெருங்கேட்டுக்கு முதற்படியாகும்.