பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

171


இந்தக் கால கட்டத்தில், 1971ம் ஆண்டு நடந்த ரேபரேலித் தேர்தலில் இந்திராவை எதிர்த்துப் போட்டியிட்ட ராஜ்நாராயண் தேர்தலில் ஊழல் நடந்ததாகத் தொடுத்த வழக்கு, அலகாபாத் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அந்தத் தேர்தலில், ஒழுங்கு மீறி, அரசு வாகனங்களையும் அரசு அலுவலரையும் தம் கட்சித் தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தினார் என்பதே குற்றச்சாட்டு. நீதி மன்றத்தில், இந்திராவை நான்கு மணி நேரம் நிறுத்தி வைத்து விசாரணை செய்யப்பட்டது.

ஜயப்பிரகாச நாராயணர், மக்களை மனச் சாட்சிகளைத் தொட்டு நியாயத்துக்குப் போராட ஒருங்கிணைக்கும் சக்தியாகத் திரட்டிய தருணம் அது. அப்போது அலகாபாத் வழக்கிலும் தீர்ப்பு வழங்கப்பட்டது.

நீதிபதி ஜகன்மோகன் லால் ஸின்ஹா தீர்ப்பை வழங்கினார்.

“இந்திரா பதவி விலகி ஒதுங்க வேண்டும்; ஆறு ஆண்டுகளுக்கு அவர் லோக்சபா உறுப்பினராகும் தகுதியை இழக்கிறார்.” இந்திராவின் உச்சம், தூக்கி எறியப்பட்ட பந்து போல் வீழ்ந்தது. இதை அவர் ஒப்புக் கொண்டாரா? எப்படி ஏற்றார்?

இந்திராவின் ஆழ்ந்த மெளனங்களும் அமைதியில்லா வெளிப்பாடுகளும் நியாய உணர்வுக்கும் நடப்பியல் முரண்பாடுகளுக்குமான மோதல்களின் பிரதிபலிப்புக்களே.

அவர் அலாகாபாத் தீர்ப்பை ஏற்றுப் பதவியில் இருந்து இறங்கலாம். ஆனால்...? உச்சத்தில் இருந்து வீழ்ந்தது அப்படியே நின்றுவிடுமா? இந்த மாளிகை, சஞ்சயின் நியாயமில்லா அடிப்படையில் அல்லவோ எழுப்பப்பட்டது? வீழ்ச்சியை அப்படியே ஒப்புக் கொண்டால் அது அத்தனை அற்ப சொற்பமாகப் போய்விடுமா?