தந்தையாதிக்கம் நிலைப்படுவதற்கு முன் திருமண முறை ஒழுக்கமான வழக்கில் வரவில்லை என்பதை மராத்திய வரலாற்றறிஞர் காலஞ்சென்ற ராஜ்வாடே தம் ‘பாரதியத் திருமண முறைகளின் வராலாறு’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். வேறு குழுக்களில் இருந்து பெண்கள் கட்டாயமாகத் துாக்கி வரப்பட்டனர் என்ற வகையில் இவருடைய ஆய்வு சொற்களின் மூலங்களில் இருந்து சான்றுகளை வெளிப்படுவத்துவதாக இருக்கிறது.
இச்சொற்களின் மூலப்பொருளைப் பார்க்கலாம்-
1. பித்ரு-அல்லது பிதா.
பா-என்ற சொல் மூலமாக விளங்குகிறது. பா என்றால் பாலித்தல், அல்லது, குழுவை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றல் - அதற்காகப் போராடக் கூடியவர்.
2. மாத்ரு அல்லது மாதா. ‘மா’ என்ற சொல், உணவைக் குறிக்கிறது. ஒரு தாய் தன்னிலிருந்தே பெற்ற சேய்க்கு உணவைக் கொடுக்கிறாள். தாயின் மார்பில் சுரக்கும் பாலை, ‘மம்மம்’ என்றே இன்றளவும் குழந்தைகள் குறிப்பிடுவதைக் கவனிக்கலாம். அம்மா, மாதா, மாம்மா போன்று, உலகின் மொழிகளில் எல்லாம் ‘மா’ என்ற சொல், உணவாக வியாபித்து, அந்த உணவை அளிக்கும் முதல்வியாக அன்னையைக் குறிக்கிறது எனலாம். எனவே, இவள் தானிய உணவோ, இறைச்சி உணவோ, எதுவானாலும் குழுவினருக்குப் பகிர்ந்தளிக்கும் பொறுப்பை ஏற்றிருக்கிறாள்.
3. ப்ராத்ரு-அல்லது ப்ராதா-குழுவுக்குத் தேவையான பொருட்களைப் பெற்று ஆதரிப்பவன்.