பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.ராஜம் கிருஷ்ணன்

37


இதிகாசத்தில், சத்தியவதி - பராசரர் - வியாசர்; சத்யவதி-சந்தனு, குந்தி என்னும் ப்ருதா, பாண்டவர்கள்-காந்தாரி-திருதராஷ்டிரன்-துரியோதனர்கள் என்ற தலை முறை மாற்றங்களில் பெண்களின் தனித்துவமான சுதந்தரங்கள் படிப்படியாக ஒடுக்கப்பட்டு வந்திருப்பதைக் காண்கிறோம். என்றாலும், அவர்கள் ‘தாய்’ என்ற முக்கியத்துவம் பெற்றிருக்கிறார்கள். அந்த மேன்மை அவர்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் மகாபாரதப் போருக்குக் காரணியாக விளங்கும் துரௌபதை, ‘தாய்’ என்ற மேன்மைக்குரியவளாகவே போற்றப்படாமல் இழிந்துவிட்ட நிலையைக் காண்கிறோம்.

துரெளபதை, “அயோனிஜா” என்று குறிக்கப்படுகிறாள். ஒரு தாயின் யோனியில் உதித்தவளல்ல என்று பொருள்படுகிறது. சீதை பூமியில் கிடைத்தாள்; இவள் யாககுண்டத்தில் கிடைத்தாள். துருபத மன்னன், தன்னை அவமானம் செய்தவரைப் பழிவாங்க, அருச்சுனனுக்கு மாலையிட, ஒரு பெண்ணை வேண்டி வேள்வி செய்தான். அதன் பயனாக இவள் அக்கினியில் தோன்றினாள் என்று சொல்லப்படுகிறது.

இது குறித்து, மராத்திய வரலாற்றறிஞர் ராஜ்வாடே தம் ‘பாரதியத் திருமண முறைகளின் வரலாறு’ என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்.

“யோனிஜ என்ற சொல்தாயின் கருவறையைக் குறிப்பதாகக் கொண்டாலும், பண்டைய வேத மொழியில், அது ‘இல்லம்’ என்ற பொருளையும் குறிக்கிறது. அதாவது, இவளுடைய தாய், இவர்களுடைய இல்லமாகிய உறைவிடத்தில் உரியவரால் கருவுறவில்லை. யாக சாலையில்-கருவுற்றாள் என்பதே பொருள்.”