பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ராஜம் கிருஷ்ணன்

51


தவறுக்குப் பரிகாரம் தேடும் அகலிகையைப் பற்றி அவர்களுக்கு முனிவர் கூறுகிறார். அப்போது குடிலிலிருந்து அகலிகை வெளிப்பட்டு, இராமனையும் முனிவரையும் வணங்குகிறாள். அவளுடைய மேனி, கடும் விரதங்களினால் மெலிந்து சுருங்கி, ‘அந்தப் பேரழகி அகலிகையா, இவள்?’ என்று சொல்லும்படி மாறி இருக்கிறது.

இவர்களைக் கண்டதனால், பாவமாகிய மாசுகள் நீங்க, அவள் கண்ணிர் மல்கத் துதிக்கையில், அவளைக் கைவிட்டிருந்த கணவர் கோதம முனி அங்கே வருகிறார். இருவரும் தம்பதியாகத் திரும்பினர் என்பது மூலக்கதை. பின்னர், பத்மபுராணத்தில், அகலிகை தவறிழைத்ததினால் கல்லாகும்படி கணவராகிய கோதம முனியினால் சபிக்கப் பெறுகிறாள். ஆண்டாண்டுக்காலம் கல்லாகிக் கிடந்த அவள், இராமனின் பாததுளி பட்டதும் மீண்டும் பெண்ணாகிறாள் என்று மாற்றப்படுகிறது.

இதை ஒட்டியே, கம்பரும் தையலைக் கல்லாக்கி விடுகிறார். இந்தக் ‘கல்’ மகத்துவம், இராமனின் கால் மகத்துவமாகி எத்தனை எத்தனை கற்பனைகளுக்கும் விளக்கங்களுக்கும் இடம் கொடுத்திருக்கின்றன? இன்றும் திருமண வைபவங்களில் அம்மி மிதிக்கும் சடங்கில், ‘பெண்ணே! நீ மனதிலும் துரோகம் இழைக்கலாகாது! அப்படிச் செய்தால், அகலிகையின் கதிதான்! நீ கல்லாவாய்!’என்று சூக்குமமாக உணர்த்தப்படுகிறது.

‘கற்பு நெறி காத்தால் இறந்தபின் வானத்து ‘அருந்ததி’ போல் தாரகையாகச் சுடர் விடுவாய்!’ என்றும் உணர்த்தப் படுகிறது. காவிய நாயகன் மீது எந்த ஒரு கரும்புள்ளியும் விழலாகாது. எனவே, கம்பர், இராமபட்டாபிஷேகத்துடன் கதையை முடித்து விட்டார்.

ஆனால், இந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில், நவீன மின்னணு இயல் சாதன வடிவில் இராமாயணம் உயிர் பெற்ற நிலையில், சீதை, பூரண