பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.ராஜம் கிருஷ்ணன்

65


சக்தியும், அந்நாட்களில் அரச குடும்பத்துக்கே அகெளரவமாகக் கருதப்பட்டன. அதற்காகவே இவருடைய நாத்தியும், மைத்துனரும் இவருக்குப் பல இன்னல்களை இழைத்தார்கள். நஞ்சிட்டு இவரைக் கொல்லவும் துணிந்தார்கள். ஆனால் மீரா சாகவில்லை. அரச குடும்பத்துக்குரிய அரண்களைக் கடந்து, கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டு வெளியேறினார். ‘மீராகேப்ரபு’ என்ற முத்திரையுடன் இவர் பக்தி கனிந்த இதயம் வடித்த பாடல்கள் நாடெங்கும் பாமர மக்களின் நாவில் ஒலிக்கலாயின. இந்த வரலாறு, மீரா என்ற பெண் கவிஞருக்கு ஏற்றம் தருவதாக, பின்னாட்களின் சமுதாயப் பாதுகாவலர்களுக்குத் தோன்றவில்லை. இவருடைய கிருஷ்ண பக்திக்கும், கவியாற்றலுக்கும் முன்பாக, இவர் ஒர் இளம் விதவை, குடும்ப கெளரவங்களை மீறியவர் என்ற உண்மைகள் முரண்பாடாக இருக்குமே? பக்தியும் பாடலும் அந்த வகையில் இவர் புகழைத் துக்கிப் பிடிக்காதே?

எனவே மீரா பற்றிய சித்திரங்கள் வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளின. இவர் கட்டுக்கழுத்தி சுமங்கலி என்ற வண்ணங்களைக் கொண்டே சித்திரிக்கப்பட்டிருக்கிறார்.

இருபதாம் நூற்றாண்டின் சக்திவாய்ந்த சாதனமாகிய திரைப்படம், மீரா பூவும் பொட்டுமாக வாழ்ந்த நிலையில் கணவரையும், அரச போகங்களையும் துறந்து, (கிருஷ்ண பக்திக்கு அவர் இடையூறு விளைவித்ததால்) வெளியேறிச் சென்றதாக நிலையுறுத்துகிறது. ‘விதவை’ என்ற சொல்லுக்குரிய நிலை, இத்தகைய அளவுக்குச் சபிக்கப்பட்டதாக இன்னமும் நிலையுறுத்தப்பட்டு வருகிறது. சுமங்கலி, கட்டுக் கழுத்தி, பூவும் பொட்டும் என்ற சொற்றொடர் பெண்ணை எந்த நிலையிலும் சமுதாய மதிப்புடையவளாக்குகிறது.

உண்மையில் சுமங்கலி என்ற சொல்; ருக்வேதம் பத்தாவது மண்டலத்தில் குறிக்கப்பெறுகிறது (X -7-1)

இ-5