பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

இந்திய சமுதாய... /துணை இழப்பும் துறவறமும்


வாழ்க்கை நடத்தினர்; கணவருடன் கள்ளருந்தினர். மகளிர் ஆடவருடன் கலந்து பழகத் தடை யிருக்கவில்லை. வினைகள் இயற்றுவதில் கணவருக்குப் பெண்கள் துணையாயிருந்தனர், பரணில் ஏறிக் கிளிகளை விரட்டிப் பயிரைப் பேணினர்-பாலை நிலத்து எயிற்றியர் (வேடர்) இரும்பு அலகினையுடைய மண்வெட்டிகளினால் நிலத்தைத் தோண்டுவர்-இல்லத்துப் பெண்கள் வாயில் முற்றம் கூட்டிச் சுத்தம் செய்வதில் இருந்து, நெல் குற்றுவது போன்ற அனைத்துப் பணிகளையும் செய்தனர். பாசறைகளிலும் பெண்கள் வினை இயற்றினர் என்றெல்லாம், பேராசிரியர் வித்தியானந்தன் தம் நூலில் பட்டினப்பாலை, பொருநராற்றுப்படை, புறநானூறு, மலைபடுகடாம், ஐங்குறு நூறு போன்ற பல நூல்களிலிருந்து சான்றுகளுடன் தெரிவித்துள்ளார். பெண்கள் காதலித்து மணந்த தலைவர்களுடன், கற்புநெறி தவறாத வாழ்க்கையில் எல்லா உரிமைகளுடனும் வாழ்ந்தனர் என்றே பொதுவான சித்திரம் தீட்டப்படுகிறது.

பெண்ணின் வாழ்வில், அன்றிலிருந்து இன்றுவரை ஒரு அவலமான சோகக் கூறாகப் பற்றியுள்ள கைம்மை நிலை பற்றிய குறிப்பை இந்நூல் தரவில்லை.

புறநானுற்றில், இது பற்றிய பல சான்றுகள் காணப்படுகின்றன. 246 ஆம் பாடல், பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு என்ற அரசிக்குரியதாகத் தெரிவிக்கப்படுகிறது. பாண்டிய நாட்டின் வட எல்லை, ஒல்லையூர் என்ற நாடு. அதைச் சோழர் கைப்பற்றிக் கொண்டனர். பூதப்பாண்டியன் சோழனுடன் போரிட்டு அதை வென்றான். அவன் மனைவி பெருங்கோப்பெண்டு, அரசியல் அறிந்தவள். கணவன் இறந்ததும் இவ்வரசி தீப்புக முனைந்தாள். அப்போது, அரசியல் சுற்றத்தாரான பெருமக்கள், அரசன் இல்லாக் குறை நீங்க, அரசை ஏற்று நடத்திட வேண்டும், தீப்புகக்கூடாது என்று தடுத்தனர்.