பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

இந்திய சமுதாய... /கவிக் குரல்கள்


செயலைப் பற்றிப் பாடுமிடத்து, ‘முதல் நாள் தந்தையை இழந்தாள்; அடுத்த நாள் கணவனை இழந்தாள்; எனினும் கலங்காது, தன் பிஞ்சுப் பாலகனுக்கு முடி திருத்தி, கச்சையணிவித்து, கையில் வேலைக் கொடுத்து அன்றைய போருக்கு அனுப்பினாள்’ என்று பாடுகிறார். அந்த வீரமகள் தானே கையில் வேலெடுத்துச் செல்லவில்லை. பெண்கள் போர்ப் பாசறைகளில் இருந்தனர். அவர்கள் யாவர்?

அக்கால விறலியர், மன்னரையும் போர்த் தலைவர்களையும் களிப்பிப்பவர்கள். பதிற்றுப்பத்து (44:7-8) செங்குட்டுவன் பாணர் கூட்டத்தில் வந்த பாடுமகளைத் தழுவி இன்புற்றான் என்று தெரிவிக்கிறது. விழாக் காலத்தில் நடனமாட வந்த விறலியின் அழகைக் கண்ட ஊர்ப் பெண்கள், தத்தம் கணவரைக் காப்பாற்றிக் கொள்ள முனைந்தார்கள் என்று (நற்றிணை) (170: 5-8-9) வேறொரு பாடல் கூறுகிறது.

எனவே, சமுதாயத்தில் சரிசமமான கெளரவத்துடன் பெண்கள் அறிவுடையவர்களாக மதிக்கப் பெற்றார்கள் என்பதைத் திட்டவட்டமாகக் கூற முடியவில்லை.

கைம்மைக் கொடுமையை ஏற்க இயலாமல் தீப்புக முடிவு செய்த அரசியினால், கைம்மைக் கொடுமையின் அநீதியை எதிர்க்க முடியவில்லை. வேதத்தில் காணப்படும் சார்ந்து வாழும் தந்தை நாயக நீதிகளே இங்கு ஆழ்ந்திருக்கின்றன. சிலப்பதிகாரம் சங்க நூல்களுக்குப் பிற்பட்டது என்று கருத்துரைக்கப்பட்டாலும், சங்க இலக்கியங்களின் தொடர்புடையதாகவே இருக்கிறது.

இந்தக் காப்பியத்தில் நம்மைக் கண்ணகியின் பாத்திரப் படைப்பே அதிகமாகக் கவருகிறது.

இவள் ஏதும் அறியாத சிறுமியாகவே இருக்கிறாள். கணவன் மாதவியிடம் செல்வங்களைத் தோற்று விட்டுத் திரும்பிய போது, அவள் அந்த அநீதியைப் பற்றி ஒரு சொல்