பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

87


எழுப்பவில்லை. கணவனோடு புறப்பட்டுக் கல்லும் முள்ளும் நிறைந்த கானக வழியில் நடந்து மதுரைக்கு வருகிறாள். இங்கே வந்து, கணவன் கொலையுண்டான் என்ற செய்தி வந்த பிறகுதான் இவள் விசுவரூபம் எடுக்கிறாள்.

ஒன்றுமே அறிந்திராதவளாகக் காட்டப்பட்ட இப் பெண், அரசன் முன் சென்று நீதி கேட்கும் ஆங்காரியாகிறாள். அரசன் தன் தவறை உணர்ந்து அக்கணமே உயிரை விட்ட பின்னரும், அவன் பத்தினி உயிரை விட்ட பின்னரும் அவள் சீற்றம் தணியவில்லையாம்.

‘தன் இடமுலை கையால் திருகி, மதுரை வலமுறை மும்முறை வாரா அமைந்து, மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து விட்டாள், எறிந்தாள்’-

என்று சிலப்பதிகாரம் விரிக்கிறது. இது ஒர் அதீதமான செயலாகவே இருக்கிறது.

பெண்மையின் - தாய்மைக்குரிய அடையாளமான உறுப்பைத் திருகி எறிந்து சூளுரை செய்யும் இச்செயல், அபூர்வமானதாக, அறிவுக்கும் பொருந்தாததாகவே தோன்றுகிறது.

‘சங்ககால மன்னர் காலநிலை வரலாறு’ என்ற நூலில் அதன் ஆசிரியர் வி. புருஷோத்தம், இந்த வழக்கத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். இவ்வழக்கம் ‘திவ்ய வதனா, ஜாதக மாலா’ என்ற பெளத்த நூல்களில் காணப்படுவதாகத் தெரிவிக்கிறார்.

தன்னைப் பிரிந்த கணவனின் கவலையில் வாடி வருந்திய மாவுண்ணி என்ற பெண், இப்படி ஒரு மார்பகத்தைக் கொய்து கொண்டாள் என்றும், காலப் போக்கில் அவள் கடவுளாக வணங்கப்பட்டாள் என்றும், அவளுக்கு வேங்கை மர நிழலில் கழனிகளில், பரண்களில் கோயில்கள் அமைக்கப்பட்டன என்றும் நற்றிணைப்பாடல் ஒன்றை மேற்கோள் காட்டுகிறார்.