பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

95


ஆனால் அந்தக் கணவன் அவளைத் தன் மனைவியாக, தனக்கு அடங்க வேண்டியவளாகக் கருதவில்லை.

தன் மனைவியுடனும், மகளுடனும் அவளுடைய அடிகளில் பணிந்து ஆசி கூற வேண்டினான்.

புனிதவதி என்ன செய்வாள்?

சிவபக்தி, அவளுக்கு உலகில் வாழ்க்கை இல்லை என்று நிர்ணயித்து விட்டது.

இந்த நிலையில், அவள் சிவனைத் தொழுது, பரமதத்தனுக்கு உரிமையான அவ்வுடலை இளமையை, அழகிய உருவைத் துறந்து, சிவனின் பக்திக்குகந்த பேயுரு தனக்கு வேண்டும் என்று இறைஞ்சினாள் என்றும் அனைவரும் கண்டு நிற்கையிலேயே அவள் பேயருவானாள் என்றும் கூறப்படுகிறது. பூமியில் ஓராடவனுக்குத் திருமண விதிப்படி உரிமையான பிறகு, அந்தப் பெண், ஆண்டவனுக்கும் கூடத் தன் உடலை உரிமையாக்க முடியாது என்ற கற்பியல் மிக அழுத்தமாக இந்த வரலாற்றில் அறிவுறுத்தப்படுகிறது.

இதே போல் தமிழ் மூதாட்டி ஒளவை பற்றிய வரலாற்றிலும், ஒளவை தனக்கு மண்ணுலகபரபான குடும்ப வாழ்வு வேண்டாம் என்று, முதுமையைத் தெய்வ வரமாகக் கேட்டுப் பெற்றாள் என்று கூறப்படுகிறது.

ஓராண், மனைவி மக்களுடன் குடும்ப வாழ்வில் ஈடுபட்டு - ஆன்மீக ஏற்றம் பெற முடியும். அவன் குடும்பம் துறந்து கானகமேகித் தவநெறியில் நின்றாலும் அவன் அழகும் இளமையும் அதற்குத் தடையில்லை. ஆனால், பெண்ணுக்கு ஆன்மீக-துறவு வாழ்வே அந்நியமானது, இயல்புக்கு மாறானது. எனவே அற்புதமாகவோ, எப்படியோ அவள் தன் இளமை மேனி அழகு எல்லாவற்றையும் துறக்க வேண்டும். அவளுடைய இளமை-மேனி நலம் இரண்டுக்கும் அவள் தானே உரியவளாக இருக்க முடியாது.