உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



வலிமை, வீரம், தைரியம், நெஞ்சுரம் (Stamina) முதலியவை தேவைக்கதிகமாகவே இருந்தன.

இதிகாச காலம் (EPIC age)

இதிகாச காலம் என்றால் இராமாயணம் மகாபாரத காலத்தையே குறிக்கிறது. இராமாயணத்தில் அனுமனைப் பார்க்கிறோம். ஆண்மைமிகு ஆற்றலுக்கும் உடல் வலிமைக்கும் அவன் ஓர் எடுத்துக் காட்டு. இராமன், இலட்சுமணன் வில் வித்தையில் விற்பன்னர்களாக விளங்கினார்கள். இராமன் சீதை திருமணமே வில்வித்தையில்தானே விளைகிறது.

மல்யுத்தப் போட்டிகள் அந்நாட்களில் அதிகமாக இடம் பெற்றிருந்தன. வாலி, சுக்ரீவன் மல்யுத்தப் போட்டி பரபரப்பான மல்யுத்தத்திற்கு ஓர் உதாரணமாகும். அது போலவே, மகாபாரதத்தின் மல்யுத்தப் போட்டிகள் இன்னும் அதிகம். பீமன், கீசகன், கிருஷ்ணன், கம்சன், பலராமன், சூரியோதனன் போன்றவர்கள் சிறந்த மல்யுத்த வீரர்களாக விளக்கப்பட்டிருக்கின்றார்கள். அக்காலத்தில் ஆண்மையை பரிசோதிக்க, பாராங்கல் தூக்குவது, எறிவது போன்ற செயல்கள் உதவின. தாண்டும் போட்டிகளும் அதிகம் இடம் பெற்றுள்ளன.

அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கியது, கடலைத் தாண்டியது போன்ற சாகசச் செயல்கள் அனைத்தும், அவர்கள் உடலை வலிமையுடையவர்களாக வைத்திருந்தார்கள் என்பதனை எடுத்துக்காட்டுவதாகும்.

இதிகாசங்களில், உடல் வலிமையில் சிறந்தவர்களையே கதாநாயகர்களாகவும், கதாபாத்திரங்களாகவும் காண முடிகிறது. அவர்கள் அனைவரும் அக்கால மக்களின் பிரதிநிதிகளாக அன்றோ நமக்குத் தெரிகின்றார்கள்!