உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


தண்டால் பயிற்சிகள்
ஒரு விளக்கம்

தண்டால் பயிற்சியானது, இந்திய நாட்டு தேகப் பயிற்சிகளிலே தலைசிறந்ததாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், எந்தவித சாதனத்தின் துணை இல்லாமலும் எந்த இடத்திலும் எந்த வயதினராக இருந்தாலும் விருப்பத்துடன் ஈடுபட்டுச் செய்யும்பொழுது, இடரினைத் தராமல் ஏற்றத்தைத் தருகின்றதன்மையில் அமைந்திருக்கிறது என்பதே பொருத்தமான காரணமாகும்.

இந்தியர்களின் வாழ்க்கை நிலையை சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்க விரும்புகின்ற ஆசிரியர்கள், எளிய வாழ்க்கை உயர்ந்த சிந்தனை என்பதாகக் கூறுவார்கள். அத்தகைய அற்புத வாழ்க்கை முறையை அளிப்பது போலவே தண்டால் அமைந்திருக்கிறது. எளிய பயிற்சி. ஆனால் உயர்ந்த பயனைத் தருகிறது என்றே நாம் கூறலாம்.

தண்ட் (Dand) என்ற சொல்லைத்தான் நாம் தமிழில் தண்டால் என்று கூறுகிறோம்.

தண்டால் என்று கூறப்படும் சொல்லுக்கு புஜம் என்று பொருள் உண்டு. அதாவது முன்கை (Fore Hand) மேல்கை (Upper Hand) என்று கையைப் பிரித்துக் காட்டுவார்களே, அதில் தண்ட் என்ற சொல்லானது மேல்கையைக் குறிக்கிறது. தண்டால் வகையின் பயிற்சி முறைகள் எல்லாம் சிறப்பாக மேல் கைத் தசைப் பகுதிகளுக்கே போய்ச் சேருவதால்தான் இதற்கு இவ்வாறு பெயர் சூட்டியிருக் கின்றார்கள்.

இதற்கு ஜோர் (Jor) என்ற இன்னொரு பெயரும் உண்டு. ஜோர் என்றால் வலிமை என்று பொருள்படும்.