இந்தியநாட்டுத் தேகப் பயிற்சிகள்
27
அதே தாவும் முறையைப்பின் பற்றி 6 அங்குல தூரம் பின்புறமாகத் தாவி, பின் பக்கமாக வரவும். (எண்ணிக்கை 3)
பின்புறம் வந்தவுடன் மீண்டும் பின்புறமாக தாவிக் குதித்து தண்டாலின் ஆரம்ப நிலைக்கு வந்து விடவேண்டும். (எண்ணிக்கை 4) .
குறிப்பு: தாவிக் குதிக்கும் பொழுது, உடல் சற்று மேலே எழும்பி, மீண்டும் தரைக்கு வரும். அப்பொழுது, உடலானது கைகளினால்தான் தாங்கப்படுகிறது. கைகளில் பலம் இல்லா விட்டால், கைபிசகிக் கொள்ளும். கீழே விழ நேரின், முகமும் வயிறும் அடிபடவும் கூடும்.
ஆகவே, அவசரப்படாமல், நிதானமாக மிகவும் எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும். -
6 அங்குலம் தாவவேண்டும் என்று குறித்திருக்கிறோம். சரியாக 6 அங்குலம் என்று கருதவேண்டாம். தாவும் தூரம் சுமாராகக் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் உடலைத் துக்கவே முடியாமல், கையைத் தூக்கி அதே இடத்தில் வைப்பவரும் உண்டு. பழகிவிட்டால், அதிக தூரம் கூட தாண்டிடமுடியும். ஆகவே, 6 அங்குலம் என்பது சுமாராக ஒரு தூரத்தைக் குறிப்பதற்காகக் கூறப்பட்டது என்று கொள்ளவும்.
இத் தண்டாலினால், கைத்தசைகள் நன்கு வலிமையும் வனப்பும் பெறுகின்றன.
3. முறுக்குந் தண்டால் (Twisting Dand)
பெயர் விளக்கம்
நேர்த்தண்டால் நிலையிலிருந்து, ஒரு காலை பக்கவாட்டில் நீட்டி, உடலை முறுக்கிய நிலையில் செய்ய இருப்பதால், இதனை முறுக்குந் தண்டால் என்று தமிழாக்கி இருக்கிறோம்.