64
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
வாங்குகிறான்' என்பதாகவும் குறிக்கின்ற நிலைமையில் பேசப்படுவதும் உண்டு.
ஆனால், அந்த ஸ்டண்ட் என்ற வார்த்தை, உடற்பயிற்சித் துறையில் இருக்கிறது என்றால், பலருக்கு வியப்பாகவே இருந்திருக்கிறது. அதுவும், உற்சாகம் தருகின்ற செயல்முறைகளைக் குறிக்கின்ற சொல்லாக இருப்பது மேலும் குழப்பத்தில் அவர்களை ஆழ்த்தி விடுகின்றது.
சாதாரணமாகச் செய்கின்ற பயிற்சி முறைகளில் இருந்து, சற்று மாறுபட்ட வடிவத்தில் செயல்கள் உருவாக்கப்பட்டிருப்பதால், இந்த ஸ்டண்ட் எனும் ஆங்கிலச்சொல்லுக்கு சாகசச் செயல்கள் என்று தமிழ்ப்படுத்தி இங்கே தந்திருக்கிறோம்.
சாமர்த்தியமாகச் செய்கின்ற செயல்கள் என்பதால் ஒருசிலர் சாதுர்யச் செயல்கள் என்றும் கூறுகின்றார்கள். இவற்றை கொஞ்சம் சிரமப்பட்டு செய்துவிடுகின்ற தன்மையில், சாதுர்யமும் சாமர்த்தியமும் நிறைய வேண்டியிருப்பதால், ‘வீர தீர சாகசம்’ என்கிற பாணியிலே, இதனை ‘சாகசச் செயல்கள்’ என்று இங்கே குறித்திருக்கிறோம். கொடுத்திருக்கிறோம்.
கோழிக்குஞ்சு நடப்பதுபோல், தவளை தத்துவதுபோல், கழுதை உதைப்பதுபோல், வால்ரஸ் நடப்பதுபோல் நடக்கின்ற செயல் முறைகள் எல்லாம் சாகசச் செயல்களுக்கு சான்றுகளாகும். ஆகவே, சாகசச் செயல்களாகக் குறிக்கப் பட்டவைகளை, இங்கே தொகுத்துத் தந்திருக்கிறோம்.
உடலுக்குப் பலன் தரும் பயிற்சிகளாகவும், ஒப்பற்ற மகிழ்ச்சி தரும் செயல்களாகவும் சாகசச் செயல்கள் அமைந்திருக்கின்றன. இவற்றால் பெறும் பயன்கள் அளவிடற்கரியனவாகும்.