உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய நாட்டுத் தேகப் பயிற்சிகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா



அதற்குப் பிறகு, முன்புறம் படுத்திருப்பதுபோல, அதாவது புஜங்காசனம் செய்வதற்காகப் படுத்திருப்பது போல, உடல் எடை முழுவதும் கைகளில் இருக்க, கைகளை முன்புறமாக ஊன்றி வைத்துக்கொண்டு, கால்களைப் பின் புறமாக விறைப்பாக நீட்டிருக்கவேண்டும்.

இதைத் தொடர்ந்து, உள்ளங்கைகளை முன்புறமாக எடுத்துவைத்து முன்னேறிச் செல்ல வேண்டும், அதாவது கைகள் நடக்க, கால்களை இழுத்துக்கொண்டு போவது போல, இழுத்துச் செல்லவேண்டும்.

குறிப்பு: கால்களின் முழங்காலும், முன் பாதங்களும் துவண்டு போகாமல், விறைப்புடன் இருப்பது போல வைத்திருக்க வேண்டும்.

முகத்தைக் கவிழ்த்துக்கொள்ளாமல், முன்புறம் பார்க்கின்ற நேர் கொண்ட பார்வையுடன் நிமிர்ந்து பார்த்த வண்ணம், கை நடையில் முன்னேறிச் செல்ல வேண்டும்.

7. சமநிலைப் பந்தாட்டம் (Balance Touch)

முதலில் ஒரு காலால் நின்றுகொண்டிருக்க வேண்டும். எந்தக் காலால் இயல்பாக உதைக்க முடியுமோ, அதற்கு மறுகாலை தரையில் ஊன்றி நிற்கவேண்டும்.

பிறகு, இரண்டு அல்லது மூன்றடி தூரத்தில் ஒருபந்தை வைத்துவிட்டு, தான் சமநிலை இழந்து கீழே விழுந்துவிடாத வண்ணம் பந்தை உதைத்துக் கொண்டிருக்க வேண்டும். சமநிலை இழந்து போகாமல் பந்தை உதைப்பதுதான் சாகசச் செயலாகும்.