உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கிற கடவுளாக இல்லை. எனவே அரசை ஆதரிக்கிற, பாதுகாக்கக்கூடிய சிந்தனைகளை உருவாக்கிப் பரப்பிய சிசரோ, புளூடார்க் ஆகிய தத்துவ ஞானிகள், தங்களுக்கு உதவாத அனெக்ஸகோராஸ் முதலிய தத்துவ ஞானிகளின் தத்துவங்களை நாத்திகம் என்று அழைத்தார்கள்.
தற்காலத் தத்துவாசிரியர்களில் சிலர் ஆளும் வர்க்கத்தின் அரசுக்குப் பயன்படாத தத்துவங்களைப் போதித்ததால், நாத்திவாதிகள் என்று அரசுக்கு ஆதரவான தத்துவவாதிகளால் பழிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்டார்கள். ‘கடவுள் வெறி’ பிடித்த ஸ்பைனோஸா, நாத்திகர் என்ற பட்டத்தோடு சமய விலக்கு செய்யப்பட்டார். பைபிளில் காணப்படும் அர்ச். ஜானின் ‘காட்சி’ (Revelation) என்ற வருங்காலம் பற்றிய வாக்குகளை ஆதரித்து எழுதிய ஃபிட்ஷே (Fitche) என்ற தத்துவவாதி, அரசை ஆதரிக்காததால், தம்முடைய பேராசிரியர் பதவியில் இருந்து விரட்டப்பட்டார்.
இதிலிருந்து ஆதிக்கத்திலுள்ள தத்துவக் கொள்கைகளுக்கு முரணான எந்தக் கொள்கையும் நாத்திகம் எனக் கருதப்பட்டது என்று பொருள்படுகிறது.

இத்தகைய கொள்கைக் குழப்பம் இந்தியாவில் இருந்ததில்லை. இவ்வாறு கூறுவதனால் சமய விரோதங்களும், போராட்டங்களும் இருந்ததில்லை என்று நான் சொல்லுவதாக எண்ண வேண்டாம். பல சமய முரண்பாடுக்ளும், சமய விரோதங்களும் பண்டைக்கால முதல் இந்தியாவில் இருந்து வந்துள்ளன. ஆனால் அவை நாத்திகம், ஆதிக்கம் என்ற கருத்துக்களில் இருந்து பிரித்துத்தான் எண்ணப்பட்டு வந்துள்ளன. ஒவ்வொரு காலத்திலும் ‘ஆத்திகம்’, ‘நாத்திகம்’ என்ற சொற்கள் பொருள் தெளிவோடு பயன்படுத்தப்பட்டு வந்தன. உதாரணமாக வேத யக்ஞங்களில் நம்பிக்கையுள்ளவர்கள் ‘ஆத்திகர்’ என்றும், அவற்றை எதிர்ப்பவர்கள் ‘நாத்திகர்’ என்றும் பண்டைக் காலத்தில் கருதப்பட்டனர். ‘கடவுள்’ நம்பிக்கை என்பது வேறோர் பிரச்சினையாக இருந்தது. உதாரணமாக வேத யக்ஞங்களை

14