பக்கம்:இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இது குறித்து வின்டர் நிட்ஸ் கூறுகிறார்: “மிகவும் உயர்ந்த, மிகவும் வலிமையுடைய இந்திரன் என்னும் தெய்வத்தின் மீது வேதகால மக்கள் நம்பிக்கையிழக்கத் தொடங்கினர். அது போன்ற பல தெய்வங்களின் மீதும் நம்பிக்கைக் குறைந்தது. இதனால் யக்ஞங்கள் புரிவது, தேவதைகளைத் தங்களோடு விருந்துண்ண அழைப்பது போன்ற சடங்குகளின் மீது நம்பிக்கை தளர்ந்தது. இந்த யக்ளுங்களேயெல்லாம், சர்வ வல்லமை படைத்த ஒரு தெய்வத்துக்காகச் செய்து வரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை புதிதாகத் தோன்றியது. எனவே ‘பிராஜாபதி’ (மனிதனைப் படைத்தவன்) என்ற கருத்து உருவாகியது. படைப்பாளி என்ற கருத்தின் உதயமே, ஒரு கடவுள் வணக்கத்தின் துவக்கம். இவருக்குப் பல பெயர்கள் சூட்டப்பட்டன; பிராமணஸ்பதி, பிருகஸ்பதி, விஸ்வகர்மன் முதலிய பெயர்களில் அவர் இயல்புத் தொகுப்பான கடிவுள் எனக் கருதப்பட்டார். இயற்கைத் தெய்வங்கள், அவருடைய பல அம்சங்களாகக் கருதப்பட்டன. ரிக் வேதத்திலேயே இதற்குச் சான்றுகள் உள்ளன.

அவரை இந்திரர் என்றும், மித்திரர் என்றும், வருணர் என்றும், அக்னி என்றும் அழைக்கிறார்கள். அவரை கருட் மாத் என்றும் பெயர் சொல்லுகிறார்கள். ஒரே ஒருவருக்குத் தான் கவிகள் பல பெயர்களைக் கொடுத்திருக்கிறர்கள் - அக்னி, யமன், மதாரீஸ்வன்.

இத்தகைய ஒரு கடவுள் கொள்கை பின்னும் வளர்ச்சி யடைந்து ரிக்வேதத்தின் பிற்காலச் செய்யுள்களில் ‘பிரம்மம்’ என்ற கருத்தாக உருவாயிற்று. இது குணங்களற்றது. தெளிவற்றது. ஆயினும் இது ஒன்றே உண்மை. இதினின்றும் தோன்றிய மாயையில் பிரம்மம் பிரதிபலிப்பதால்தான் பிரபஞ்சம் தோற்றம் கொள்கிறது. இக்கொள்கை ஒரு கடவுள் கொள்கையின் வளர்ச்சிநிலை.

இதனை ஒரு கடவுள் கொள்கையாக ராமானுஜர் மாற்றினார். குணமற்ற பிரம்மத்திற்கு நற்குணங்களை ஏற்றி அவர் சகுணப் பிரம்மம் என்ற கருத்தைப் படைத்தார்.

23