பக்கம்:இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எவ்வித சுதந்திரமும் அற்றவன் என்பது பொருளல்ல. ‘விஞ்ஞான விதிகளை மனிதன் அறிய முடியும்; அறிந்து அவ்வறிவால் பொருள்களின் இயக்கத்தை நெறிப்படுத்த இயலும்’ என்று விஞ்ஞானம் வெளிப்படுத்தியுள்ளது. இன்று எத்தனை சக்திகள் மனிதன் விஞ்ஞான விதிகளை அறிந்ததால் அவனுக்குப் பணி புரிகின்றன?

ரசாயன விஞ்ஞானத்தை மனிதன் படைத்திருக்கும் காரணத்தால், விவசாயத்திற்குத் தேவையான ரசாயன உரங்கள், பூச்சி கொல்லிகள், நமது உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கக்கூடிய பல மருந்துப் பொருள்களையும், நோயைக் குணப்படுத்தக்கூடிய பல ஒளஷதிகளையும் இயற்கையில் இருந்து படைத்துள்ளான். அறுவை வைத்தியம் எவ்வளவு முன்னேற்றமடைந்துள்ளது என்று இன்று சொல்ல வேண்டியதில்லை. இதற்குக் காரணம் உயிரியல் விதிகளையும், உயிர் ரசாயன விதிகளையும், வேறு விஞ்ஞானப் பிரிவுகளின் விதிகளையும் மனிதன் அறிந்து பயன்படுத்துவது தான். விறகைத் துளைத்துத் தீயை உண்டாக்கிய மனிதன், குளிர்காயத் தீயின் உஷ்ணத்தைப் பயன்படுத்தினான். இன்று பிரம்மாண்டமாக வளர்ச்சி பெற்றுள்ள உற்பத்தித் தொழில்களுக்கு வெப்பம் அளிக்க நிலக்கரியைப் பூமியின் அடியில் இருந்து தரைமட்டத்திற்குக் கொண்டு வருகிறான். பாறை எண்ணெயைத் தரையின் அடிப்பாகத்தில் இருந்து மேலே கொண்டு வருகிறான். நிலக்கரியும் பாறை எண்ணெயும் இருப்பது மனிதனுக்கு எப்படித் தெரியும்? இவை இருக்கும் இடங்களில் உள்ள பிசாசுகள், தம்மை ஆராதிக்கும் சாமியாடிகளுக்கு வந்து காட்சி கொடுத்துச் சொல்லிச் சென்றனவா? தரையியல் (Geology) தரையியல் ரசாயனம் (Geo chemistry)ஆகிய விஞ்ஞானங்களின் வளர்ச்சியே நிலக்கரி, உலோகங்கள், மண்ணெண்ணெய் முதலியன எத்தன்மையுடைய பாறைகளில் காணப்படும் என்ற விதிகளைத் தோற்றுவித்தன. இவ்விஞ்ஞான அறிவைப் பயன்படுத்தி மனிதன் பூமியின் உட்குடலைத் தோண்டித் தனக்குத் தேவையான பொருள்களைப் பெறுகிறான். ஃபிஸிக்ஸ்

27