பக்கம்:இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாதிப்பதுதான் யதேச்சை வாதம். இரண்டும் கடவுள் அல்லது தேவர்களின் தலையீட்டை எதிர்க்கின்றன. இரண்டும் நாத்திகச் சிந்தனை உடையவை. ஆயினும் நேர் எதிர் சிந்தனைப் போக்குடையவை.

இவ்விரண்டின் வேறுபாட்டை மிகத் தெளிவாக குணரத்னா கூறுகிறார் (இவர் நடுக்கால ஜைன தத்துவவாதி). “இயற்கை வாதிகள் (சுபாவவாதிகள்) கீழ் வருமாறு கூறுகிறார்கள்: பொருள்களின் மாற்றங்கள் அவற்றில் உள்ளார்ந்திருக்கும் தன்மைகளால் (சுபாவம்) நிகழுகின்றன. ஒவ்வொன்றும் உருப்பெறுவது சுபாவம் என்னும் இயற்கைப் போக்கின் செயல்பாட்டினலேயே. உதாரணமாக களிமண், சட்டியாக மாறுகிறது. துணியாக மாறுவதில்லை. நூலிழையில் இருந்து துணி உண்டாகிறது. சட்டி உண்டாவதில்லை. ஒழுங்கான இந்நிகழ்ச்சிகளுக்கு சுபாவமே காரணமாகும். உலகில் நிகழும் எல்லா மாற்றங்களும் சுபாவத்தினால் நிகழ்கின்றன என்று அறியலாம். அதனால் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:


முள்ளைக் கூர்மையாக்கியவர் யார்?
விலங்குகளிலும், பறவைகளிலும் பற்பல வேறுபாடுகள் இருப்பது எதனால்?
சுபாவம் என்பதால் இவை அவ்வாறுள்ளன. யாரும் முள்ளைக் கூர்மையாக்கவோ, விலங்கு பறவைகளே வேறுபட்ட தன்மைகளோடு படைக்கவோ இல்லை.
இலந்தை மரத்தின் முட்கள் கூர்மையாக இருக்கின்றன. சில முட்கள் நேராகவும், சில முட்கள் கோணலாகவும் உள்ளன.
ஆனால் பழம் உருண்டையாக இருக்கிறது.
இவற்றையெல்லாம் யார் அவ்வத்தன்மை உடையதாகச் செய்தார்கள்.

ஒவ்வொரு பொருளின் உருவாக்கத்திற்கும் காரணம் சுபாவமே என்ற முடிவு தவிர்க்க முடியாதது.

30