பக்கம்:இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குணரத்னா, யத்ரிச்சா வாதத்தை விளக்கிப் பின்வருமாறு கூறுகிறார்:

நிகழ்ச்சிகள் காரணமின்றி நடைபெறும் என்று யதேச்சை வாதிகள் கூறுகிறார்கள். காரண காரியத் தொடர்ச்சியெதுவும் இன்றி உலக நிகழ்ச்சிகள் நடைபெறுவதாகவும், நிகழ்ச்சிகள் யதேச்சையாக நிகழ்வதாகக் கூறுபவர்கள் யதேச்சை வாதிகள். உலக நிகழ்ச்சிகள் அனைத்தும் காக்கை உட்காரப் பனம்பழம் விழுவதுபோல நடக்கின்றன. தற்கால இந்தியத் தத்துவவாதிகள் சுபாவவாதத்தை ‘இயற்கைவாதம்’ என்றும், யதேச்சை வாதத்தை விபத்துவாதமென்றும் அழைக்கிறார்கள். இவ்விரு வாதங்களும் காரணம் பற்றிய கருத்தில் வேறுபடுகின்றன. ஆனால் கடவுளுக்கு உலக நிகழ்ச்சிகளில் எவ்விதத் தலையீடும் இல்லை என்றே கூறுகின்றன.

சாந்தராக்ஷிதர் என்ற பெளத்தரும், குணரத்ன என்ற ஜைனரும் சுபாவ வாதத்தையும், விபத்து வாதத்தையும் எதிர்த்து வாதாடினர்கள். அவர்களின் வாதங்களின் பரபக்க வாதமாக இவை இரண்டும் இருந்தன. இவ்வெதிரிகளின் வாதங்களில் இருந்து சுபாவவாதம், விபத்துவாதம் இரண்டின் தத்துவ உள்ளடக்கத்தை அறிந்து கொள்கிறோம். இக்கொள்கைகளில் சுபாவவாதத்தை பிரஹாஸ்ப தீயர்கள் என்ற லோகாயதிகள் தங்கள் வாதங்களுக்குத் துணைக்கொண்டார்கள். அவர்கள் கூறியதாவது:

தீயின் தன்மை சுடுதல்.
நீரின் தன்மை குளிர்ச்சி.
காற்று இரண்டும் இல்லாதது.
இவ்வேறுபாடுகளை உண்டாக்கியது யார்?
அவற்றின் சுபாவத்தால் அவை அவ்வாறிருக்கின்றன.

சாங்கியர்களும் சுபாவவாதச் சார்புடையவர்களே. தற்கால இந்தியத் தத்துவவாதியான கோபிநாத் கவிராஜ் கூறுவதாவது: “நிமித்த காரணம்” என்று உலகப் பரிணாம

31