பக்கம்:இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எதிர்த்தார். கடவுள் நம்பிக்கை, அதைத் தோற்றுவித்த சமூகப்படை மாறும்போது மறையும் என்று கூறினார். வரலாற்றுப்படி முறை வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தனது புறவய வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவே மனிதன் மதத்தைப் படைத்தான். தனது ஆற்றலால் விளைச்சலை அதிகப்படுத்த முடியவில்லை. மழை பெய்யச் செய்ய முடியவில்லை, வேட்டை விலங்குகளைக் கொல்லமுடியவில்லை, போரில் வெற்றி பெற முடியவில்லை என்று உணர்ந்த மனிதன், மந்திர தந்திரங்களையும், கடவுள்களையும் தனது ஆற்றல மிகுவித்துக் கொள்ளப் படைத்தான். இக்கருத்துக்கள் மனித வரலாற்றில், மனிதன் தனது புறவய வாழ்க்கையில் தனது ஆற்றல் குறைவை உணரும் போது, இயலாமையை உணரும்போது, தன்னைவிட அதிகமான சக்தி படைத்த தெய்வங்களைத் தனது கற்பனையால் படைத்து அவற்றிடம் தனது தேவைகளைப் பூர்த்தி செய்து வைக்க கோரிக்கை விடுத்தான்.

இவ்வாறு மனிதன் மதத்தைப் படைத்தான். மனிதன் உலகத்திற்கு வெளியே வாழும் விலங்கு அல்ல. தற்காலப் பரிணாமவாதம் மனிதனது தோற்ற மூலத்தை விளக்குகிறது. மிகவும் சிக்கலான இயற்கை மாற்றங்களுக்குப் பின்னர், இம்மாற்றங்களின் விளைவாக மனிதன் தோன்றினான். பிற விலங்குகளைப்போல அவனும் இயற்கையின் ஒரு பகுதிதான். மனிதன் தோன்றிய பின் விலங்குகளுக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள உறவு தன்மை, மாற்றம் அடைந்தது. விலங்குகள் இயற்கையோடு இசைந்து போகின்றன. இயற்கையின் வலிமைக்கு இணங்கித் தங்களது உறுப்புக்களை மாற்றிக் கொள்ளுகின்றன. இயற்கையோடு அவற்றின் உறவு, செயலூக்கமற்றது (Passive) தான். இயற்கையளிக்கும் காய்கனிகளை அவை உண்கின்றன. உணவைத் தேடிப் பெற்றுக் கொள்பவையாக (food gatherers) அவை இருக்கின்றன. செயலூக்கத்தோடு உணவை உற்பத்தி செய்வதில்லை. குளிர் தாங்க உரோமத்தை இயற்கை சில விலங்குகளுக்கு அளித்துள்ளது. இயற்கையை அவை தங்கள் வாழ்க்கையால் மாற்றியபோதிலும் அம்மாற்றங்கள்

36