பக்கம்:இந்திய நாத்திகமும் மார்க்சீயத் தத்துவமும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பவர்கள்’ (Producers and Organisers of production) என்ற உழைக்கும் பிரிவினரும், தாம் உழைக்காமல், உழைப்பைத் திட்டமிட்டு அமைப்பவர்களும் என்ற பிரிவுகள் தோன்றின. உழைப்பை அமைப்பவர்கள் உழைப்பின் கடுமையில் இருந்து விடுதலை பெற்றனர். இவர்கள்தான் ‘சிந்தனையாளர்களாக’, ‘மதகுருமார்களாக’, ‘மந்திர தந்திரங்களை’ நடத்துபவர்களாக, பொருளுற்பத்தி உழைப்பில் இருந்து விலகிச் செயல்பட்டனர். இவர்களில் சிலர் மதக்கொள்கைகளையும், வேறு விஞ்ஞானச் சிந்தனைகளையும் உருவாக்கினர். வானவியல், கணிதம், பெளதீகம், ரசவாதம் போன்ற பல விஞ்ஞானங்களை இவர்கள் வளர்த்தார்கள். இவர்கள் உழைப்பை மிகவும் இழிவாகக் கருதினர். உதாரணமாக இந்தியாவில் ஆரிய சமூகத்தில் பிராமணனும், க்ஷத்திரியனும் ஏரைத் தொடக்கூடாது என்று தர்ம சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. பிராமணன் ஏழையாகிவிட்டால் அடுத்த வருணமான க்ஷத்திரியன் தொழிலைச் செய்யலாம். இதற்கு ஆபத்து தர்மம் என்று பெயர். அது போன்றே க்ஷத்திரியன் வைசியன் தர்மத்தைக் கடைப்பிடிக்கலாம். ஆனால் மேலிரண்டு வருணத்தாரும் சூத்திரனைப் போல் உடல் உழைப்பை ஒருபோதும் மேற்கொள்ளக் கூடாது. இது போன்றே பெளத்தத் துறவிகள் ஏரைத் தொடக்கூடாது. பொருள் வருவாயுள்ள எந்த உழைப்பையும் மேற்கொள்ளல் ஆகாது. இவ்வாறாக உழைக்க ஆனால் உழைப்பை அமைக்கும் சமூகப் பிரிவாக ஆளும் வர்க்கமும், உழைப்பையே வாழ்க்கைச் சாதனமாகக் கொண்ட உழைக்கும் வர்க்கமும் ஆக பண்டையச் சமுதாயம் பிரிந்தது. இப்பிரிவினரையே மேலோர், கீழோர் என்று பண்டைத் தமிழர்கள் குறிப்பிட்டனர்.

இம்மாறுதல் எவ்வாறு நடந்தன என்று மார்க்சீய சமூக மானிடவியலார் ஆராய்ந்து வருகிறார்கள். இப்போது, பண்டைக்காலச் சமுதாய வளர்ச்சிபற்றி நாம் அறிந்துள்ள மார்க்சீய சிந்தனையை மிகவும் சுருக்கமாக நான் மேலே குறிப்பிட்டுள்ளேன்.

41