பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

'இந்தி' பொது மொழியா?


'இந்தி' பொது மொழியா? நன்மை உண்டாகிவிடுமோ? ஆங்கிலங் கற்றவர் அம்மொழியைப் பேசினால் அதன் பொருளை யறியாமல் நம் ஏழைமக்கள் திகைத்து விழிப்பதுபோலவே, இந்தி மொழியைக் கற்றவர் நம்மக்களிடையே இந்தியிற் பேசினால் அவர் அதன் பொருளை யறியாமல் திகைத்து விழிப்பரென்பதை நாஞ் சொல்லுதலும் வேண்டுமோ? ஆகவே, இவ்விந்திய தேயத்திற் பல நாடுகளில் பல வேறுமொழிகளைப் பேசுவாரான பலவேறு மக்கட் குழுவினர்க்கும் உண்மையாகவே நன்மை செய்யும் எண்ணமும் நன்முயற்சியும் உடைய தொண்டர்கள் இருந்தால், அவர் அவ்வந்நாட்டினருந் தாந்தாம் பேசும் தாய்மொழியையே நன்கு பயின்று அதன் வாயிலாக இம்மை மறுமை வாழ்க்கைக்குரிய பல துறை களிலும் நல்லறிவுபெற்று முன்னேற்றம் அடையும்படி உதவி செய்தல் வேண்டும். இங்ஙனஞ் செய்வதை விட்டுத், தந் தாய்மொழியையே கல்லாத பேதைகளாய் வறுமையில் வருந்திக் காலங்கழிக்கும் நம் எளிய மக்களுக்கு, அவர் சிறிதும் அறியாத இந்திமொழியைக் கட்டாயப் பயிற்சியாக வைக்கப் பெரிது முயல்வது, உமிக்குற்றிக் கைசலிப்பதாய் முடியுமே யல்லாது, அதனால் ஒரு சிறுபயன்றானும் விளையமாட்டாது. அற்றன்று, இவ்விந்திய தேயத்தின் பற்பல நாடு களிலும் உயிர்வாழும் மாந்தர்கள் பற்பல மொழிகளைப் பேசுவாராய் இருத்தலின், இந்நாட்டவரெல்லாரும் ஒரு பொது நன்மையின் பொருட்டு ஒருங்கு கூடிப் பேச வேண்டிய காலங்களில் இந்தியை அவரெல்லாரும் பொதுமொழியாய்க் கையாளுதலே நன்று ; ஏனென்றால், இத்தென்னாட்டவரைவிட வட நாட்டவர் தொகையே மிகு தியாயுள்ளது ; அவ்வாறு மிகுதியாயுள்ள வட நாட்ட வரிற் பெரும்பாலார் இந்திமொழியையே பேசு தலின், அவரோடொப்பத் தென்னாட்டவரனைவரும் இந்திமொழி யைக் கற்றுப் பேசுதலே நன்மைக்கிடமாகு மென்று தேயத்தொண்டர் சிலர் கூறுகின்றனர். இவரது கூற்றுப் பொருந்தா தென்பது காட்டுவாம்.