பக்கம்:இந்தி பொது மொழியா.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

'இந்தி' பொது மொழியா?


புரியுங்கால், அவற்றிற்கு வேண்டும் பல்வகைப் பண்டங் களைப் பல நாடுகளிலிருந்து வருவித்தற்கும், அவற்றால் தாஞ்செய்து முடித்த பண்டங்களைப் பல நாடுகளிலும் உய்த்து விலைசெய்து ஊதியம் பெறுதற்கும் ஆங்கில மொழியேயன்றி வேறேதுந் துணை செய்யுமோ ? செய் யாதே. இன்னும் உலகமெங்கணும் நடைபெறும் வாணிகமெல்லாம் ஆங்கில மொழியின் உதவி கொண்டே நன்கு நடைபெறுதலை அறிந்து வைத்தும், அதனைப் பொதுமொழியாக வழங்காமல், விரிந்த - வாணிக வாழ்க்கைக்கு ஒரு சிறிதும் பயன்படாத இந்தியைப் பொதுமொழி யாக்க முயல்வோர் நம்மனோர்க்கு உண்மை யில் உதவி செய்பவர் ஆவரோ? கூர்ந்து பார்மின்கள்! இனி, அரசியற்றுறையில் நம் இந்து மக்களை முன்னேற்றி வருவதும், தம்முரிமைகளைக் கண்டு கேட்க அவர்கட்குக் கண் திறப்பித்ததும், இவ்விந்திய நாடெங்கணும் பெரும் பொருட்செலவாற் பலகோடி மக்களாற் பயிலப்பட்டு இயற்கையே பொதுமொழியாய்ப் பரவிவருவதும், இலக்கண இலக்கியத் துறைகளிலும் நடு நிலைகுன்ற உண்மைகாண் வகைகளிலும் பன்னூறாயிரக் கணக்கான நூல்கள் புதியபு தியவாய்ப் பெருகும் அறிவுப் பெருஞ் செல்வம் வளரப் பெறுவதுமான ஆங்கில மொழியை, எல்லா மொழிகளிலும் உள்ள எல்லாச் சிறந்த நூல்களையுந் தன்கண் மொழிபெயர்த்துவைத்து அவற்றின் பொருளை அவை வேண்டுவார்க்கு எளிதின் ஊட்டுந் தனிப்பெருஞ் சிறப்பு வாய்ந்த ஆங்கில மொழியை, நம்மனோர்க்குப் பொது மொழியாக்காமல், இந் நலங்களில் ஒரு கடுகளவு தானும் இல்லா இந்தி மொழியைப் பொதுமொழியாக்க முயலல் அறிவுடையார் செயலாகுமா? ஆகாதே... ஆதலால நந்தமிழ் நாட்டவர் ஆங்கிலத்தையுந் தமிழையுமே நன்கு பயின்று நலம் பெறுவாராக!