பக்கம்:இனியவை நாற்பது-மூலமும் உரையும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15



கற்றவர்முன் தாம் கற்றதை எடுத்துரைத்தல் மிகவும் இனியது. தம்மினும் மிக்க அறிஞரைச் சேர்ந்து பழகுதல் மிகவும் சிறக்க இனியதாகும். எள் அளவாயினும் பிறரிடம் இரவாது தான் பிறர்க்குக் கொடுத்தல் எல்லா வகையிலும் மிகவும் இனிது.

16

நண்பர்கட்கு நல்லன செய்தல் இனிது. சிறிதளவும் தம் பகைவருடன் ஒட்டாதவர்களைத் தம்மோடு சேர்த்துக் கொள்வது முன்னதினும் இனியது. பல வகையான உணவுப்பொருள்களையும் உடையதாய், பகைவர் பலரும் உடைந்து ஒடச் செய்யும் மெய்யான அரண் துணையை அடைந்திருத்தல் இனிது.

17

பொது மன்றத்தில் பெருமக்கள் வாழ்ந்து அறிவுரை கூறும் ஊர் இனிது. நூல் நெறிப்படி வாழும் தவசிகளின் பெருமை இனியது. குறையாத உயர்ந்த சிறப்புடைய முதிய பெற்றோர்கள் இருவரையும் காலையில் எழுந்து கண்டு வணங்குதல் இனிது.

18

நண்பரைப் பற்றிப் புறம் பேசாதவனாய் வாழ்தல் மிக இனிது. மெய்ந்நெறியைப் போற்றிப் பணிவுடன் ஒழுகுதல் இனிது. முட்டுப்பாடில்லாத பெருஞ் செல்வத்தை ஈட்டினால், மற்றபடி அதைத் தக்க பிறர்க்குக் கொடுத்தல் இனிது.

19

வஞ்சகரைச் சேராமல் விட்டு நீங்குதல் இனிது. புலவர் களின் வாய் அறிவுரையைப் போற்றி ஒழுகுதல் இனிது பரந்த இடமுடைய உலகத்தில் உள்ள உயிர்கட் கெல்லாம் தக்க பயன் உறும்படி வாழ்வது இனியது.

20