பக்கம்:இன்னமுதம்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிசைப்பா திருவிசைப்பா, திருப்பல்லாண்டு என்ற இரண்டும் ஒன்பதாம் திருமுறையாக வகுக்கப் பெற்றுள்ளன. சேந்தனார், திருவாலியமுதனார், கருவூர்த்தேவர் போன்ற பலர் பாடியவை இவை. இப்பாடலும், அடுத்த பாடலும் கருவூர்த் தேவர் பாடியவை. பவளமால்வரையைப் பனிபடர்ந்தனையதோர் படரொளிதரு திருநீறும் குவளைமாமலர்க் கண்ணியும் கொன்றையும் துன்றுபொற் குழல்திருச்சடையும் திவளமாளிகை சூழ்தருதில்லையுள் திருநடம்புரிகின்ற தவளவண்ணனை நினைதொறுமென்மனம் தழல்மெழுகொக்கின்றதே. "பவளமலை ஒன்றைப் பணி படர்ந்து சூழ்ந்திருப்பது போல் இறைவனுடைய சிவந்த மேனியில்) திருநீறு பூசப்பெற்றும், குவளை மலர்களும் கொன்றை மலர்களும் நெருங்கி நிறைந்துள்ள பொன் போன்ற நிறமுடைய சடைக்கற்றையுடனும், வெள்ளிய சுண்ணத் தாலாய மாளிகைகள் சூழ்ந்த தில்லையம்பலத்தில் திருநடம் புரிகின்ற முத்து போன்ற வெண்மையான மேனியையுடைய சிவபெருமானை நினைக்குந்தோறும் என் மனம் நெருப்பிலிட்ட மெழுகு போல் உருகுகின்றது.” (பவளமால்வரை பவள மலை; துன்று- நெருங்கிய; திவளம்- சுண்ணாம்புதவளம்-முத்து)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/64&oldid=747069" இலிருந்து மீள்விக்கப்பட்டது