பக்கம்:இன்னமுதம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

"தொன்று நிகழ்ந்தது அனைத்தும் உணர்ந்திடும் சூழ் கலைவாணர்களும், இவள் என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினை” உடையவளாகிய தமிழ்த்தாய் இலக்கிய வளம் மிகுந்து விளங்குகிறாள். நவரசம் ததும்பும் காவியங்களும், மக்களை நல்வழிப்படுத்தும் நீதி நூல்களும் தமிழில் நிறைய உண்டு. இவை மட்டும் இன்றி பக்தி மார்க்கத்துக்கு அடிப்படையான தோத்திரப்பாடல்களும் தமிழன்னைக்கு அணிகலன்களாக விளங்குகின்றன. இப்பாடல்கள் தமிழினத்தின் சமய நெறிகளை அழகாகப் பிரதிபலிப்பனவாகும்.

சமயம் என்பது தமிழ் மக்களின் ரத்தத்தில் ஊறிய ஒன்று. மொழி, மதம், இறையருள் என்னும் மூன்றும்தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில்- ஒன்றுடன் ஒன்று இரண்டறக் கலந்தவை; பிரிக்கவே முடியாதவை. தமிழ் மொழிப் பற்று என்பது சமயப் பற்றாகவும், சமயப் பற்று என்பது பாரதமென்னும் தேசியப் பற்றாகவும் மலரக்கூடியதாகும். ஏனெனில் "தென்னாடுடைய சிவன்” எழுந்தருளியிருப்பது வடக்கே உள்ள கயிலாய மலையிலாகும். ஆகவே தமிழர்களின் சமயமும், பக்தி மார்க்கமும் பாரத நாட்டின் பண்பாட்டில் ஒரு சிறப்பு மிக்க அங்கமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னமுதம்.pdf/7&oldid=1350698" இலிருந்து மீள்விக்கப்பட்டது