பக்கம்:இன்னொரு உரிமை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92  சு. சமுத்திரம்


"மாமா... ஒங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும். நீங்க தான், தம்பிகிட்ட பேசி... அவனைச் சம்மதிக்க வைக்கணும்..."

ஐயாசாமி அவனை ஆச்சரியமாகப் பார்த்தார்.

வைரமணி ஐயாசாமி தாத்தாவின் கண்களை முதன் முதலாக நேருக்கு நேராகப் பார்த்தான், அவனுக்கே தான் ஒரு 'பிடி' அதிகமாக வளர்ந்துவிட்டது போன்ற எண்ணம் ஏற்பட்டது. மார்பு பரிசுத்தமாக நிமிர்ந்து நிற்பதுபோன்ற ஒரு பெருமிதம். மூச்சு எந்தவித இடர்ப்பாடுமில்லாமல் கம்பீரமாக விரிவது போன்ற உணர்வு. சாதாரணமான மனிதர்களைவிட, தான் அசாதாரணமானவன் என்கிற நினைப்பு. ஏதோ ஒருவித தியாகத்தினால், இழப்பு ஏற்படாமல் இன்பம் ஏற்பட்டிருப்பது போன்ற தெம்பு. வாழ்க் கையில் முடியாமல் நிற்கும் ஆன்மாவை அடையாளம் கண்டு கொண்ட ஞானோதயம். வாழ்வின் முழுப் பொருளையும் அறிந்து கொண்டது போன்ற ஒரு தெளிவு.

வைரமணி சொல்லச் சொல்ல, ஐயாசாமி தாத்தாவால் தன் மகிழ்ச்சியையும் கண்ணீரையும் அடக்க முடியவில்லை. "ஏல, கனகராஜ் ஓடியாடா, ஓடியாடா" என்று சொல்லிக் கொண்டே பிள்ளை இல்லாத அந்த வீட்டில், தாத்தா துள்ளி விளையாடிக் கொண்டிருந்தார்.

வைரமணி லிங்கம்மாவை புதிய பாசத்தால் புன்னகை தவழ பார்த்துக் கொண்டே இருந்தான்.

அப்போது-

லிங்கம்மா தன் தோளில் நகத்தை வைத்துச் செல்லமாகப் பிராண்டிக் கொண்டிருந்த பூனைக்குட்டியை பொய்க் கோபத்தோடு பிடிப்பதற்கு முயற்சி செய்தாள்.

அந்தப் பூனைக்குட்டியும் அவளுக்குச் சளைக்காதது போல், அவள் கழுத்தில் தொங்கிய மங்கல நாணை வாயால் கௌவி, மகிழ்ச்சியோடு சேலைக்கு மேலே கொண்டுவந்து வைரமணிக்குக் கம்பீரமாகக் காட்டிக் கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/101&oldid=1369309" இலிருந்து மீள்விக்கப்பட்டது