பக்கம்:இன்னொரு உரிமை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94  சு. சமுத்திரம்


சத்தம் போட்டு கீழே விழுந்தது. அந்தச் சத்த அதிர்ச்சியில் 'செருவைப்' பக்கம் குஞ்சுகளோடு மேய்ந்து கொண்டிருந்த கோழி 'கள்ளப்பிறாந்து' வந்துவிட்ட தாய் நினைத்து குஞ்சுகளுக்கு அபயக்குரல் கொடுத்து, அவற்றைத் தம் இறக்கைகளுக்குள் உள்வாங்கிக் கொண்டது. தொழுவத்தில் கட்டப்பட்டு இருந்த கன்றுக்குட்டி, 'ம்மா...' என்றது. குங்குமச்சிவப்பான அதன் உடம்பில் ஆங்காங்கே தோன்றிய வெள்ளைப் புள்ளிக் கோலங்களும் அதன் மதர்ப்பான பார்வையும், கன்றுக்குட்டியை மான் குட்டி போலக் காட்டியது. முத்துலிங்கம் அதன் அருகே வழக்கம் போல் சென்று, அதன் முகத்தை நிமிர்த்தி மோவாயில் தடவி விடாமல் 'உஷ்' என்று தன்பாட்டிற்கு ஓர் உதட்டுப் பிதுக்கல் ஓசையை எழுப்பியபடி தொழுவத்தை ஒட்டிக் கட்டப்பட்ட திண்ணை மேட்டில் கேழ்வரகு, சோளம், தினை போன்ற தானிய வகைகளைத் திரித்து மாவாக்கும் 'திருவல்' மேல் போய் உட்கார்ந்தான்.

கீழே உள்ள அகன்ற வட்டக்கல்லின் மத்தியில் நேராக இருந்த இரும்புக் கம்பியில் பொருத்தப்பட்ட சின்ன வட்டக் கல்லின் மேல் ஒரு காலைத் தூக்கி வைத்தபடி தலையில் 'சிம்மாடு' போல் பாம்புப் பெட்டிமாதிரி வட்ட வட்டமாய் மடித்து வைத்திருர்த துண்டை எடுத்து நீளமாக்கி உதறினான். பிறகு அதனால் வேர்வைத் துளிகளைத் துடைத்துக்கொண்டான். தொழுவத்து கன்றுக்குட்டி "எனக்குப் புல் முக்கியமல்ல நீதான்" என்று சொல்லாமல் சொல்வதுபோல் புல்லும் அவனும் தனியாய்ப் பிரிந்தபோது, அது அவனையே பார்த்து, அவன் நடந்த இடம் நோக்கிப் பார்வையை நகர்த்தி இப்போது முகத்தை தெற்குப்புறமாய்த் திருப்பி "ம்மா, ம்மா" என்றது. 'பெரிய' ஓலை வீட்டில் 'பெருச்சாளி' பிடித்த காலை அழுக்கிப் பிடித்தபடி முடங்கிக் கிடந்த திருமலையம்மா, மகனுக்குக் கஞ்சி ஊற்றிக் கொடுக்கக் கும்பாவை எடுத்துக்கொண்டு எழுந்தாள். எழுந்தவள், மகன் புல்லை எடுத்து 'அளியில்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/103&oldid=1369319" இலிருந்து மீள்விக்கப்பட்டது