பக்கம்:இன்னொரு உரிமை.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96  சு. சமுத்திரம்


இப்போது, அவன் முகத்தில் விழித்தால் பார்வையாலேயே எரிப்பான். எள்ளும் கொள்ளுமாய் வெடிப்பான். என்ன செய்யலாம்..."

தில்லையம்மாவின் சத்தம் கூடிக்கொண்டேயிருந்தது. 'கமலசுந்தரி, கமலசுந்தரி' என்று அவள் வேகவேகமாகக் கத்தியது. 'சுந்தரி கமலம் சுந்தரி கமலம்' என்று கூட ஒலித்தது. மகள்காரி எழுந்தாள், இன்னும் போகவில்லையானால் அம்மா அங்கேயே வந்து எட்டு ஊருக்குக் கேட்கும்படி கத்துவாள். கண்டபடி திட்டுவாள். திட்டு என்பது அவளுக்குப் புட்டுமா திரி, வயசுக்கு வந்த மகளாச்சே என்று கூடப் பார்க்கமாட்டாள்.

கமலசுந்தரி நகர்ந்து நகர்ந்து, நடந்து நடந்து, வீட்டிற்குள் காலடி வைத்தாள் அண்ணனைப் பார்க்காமல் முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக்கொண்டு உள்ளே போகப் போனாள். பதுங்கிப் பதுங்கி வந்தவள்-அண்ணனின் பார்வை படாமல் இருப்பதற்காக தலையைச் சாய்த்து, கொண்டையால் முகத்தை மறைத்தபடி வந்தவள் ஆச்சரியப்பட்டாள். அவளை எதேச்சையாகப் பார்த்த முத்துலிங்கம் பேசாமல் இருந்தான். அவளை கோபமாகப் பார்க்காமல், குரோதமாகக் கேட்காமல் முற்றத்தில் வெட்டப்பட்ட மண்ணை விழுங்கிக்கொண்டிருப்பது போல் தோன்றிய மண்வெட்டியை அணில் மாதிரி பார்த்தான்! கமலசுந்தரி மகிழ்ச்சி தாங்கமுடியாமல் குதித்து நடந்தபோது அம்மாகாரி அண்ணணின் குறையைத் தீர்த்து வைத்தாள்.

"எங்களா போனே மூதேவி! உடம்பு மட்டும் வயசுக்கு வந்துட்டா போதுமாளா? வெளிலே என்ன பண்ணின? இந்தப் புத்தியால தான் ஒப்பன மூணு வயசிலே துள்ள துடிக்க விழுங்கிட்ட! இவன் கவர்னர் மவன்... என்ன சொன்னாலும் கேட்கமாட்டான். நீயாவது அந்த வாயில்லா ஜீவனுக்கு புல்லை எடுத்துப்போடேன்! நாம் மட்டும் சாப்பிட்டா போதுமா!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/105&oldid=1369329" இலிருந்து மீள்விக்கப்பட்டது