பக்கம்:இன்னொரு உரிமை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காமதேனு101

“யாருக்காவது நிலத்தை குத்தகைக்கு விட்டுடலாம். வீடு சும்மா கிடக்கட்டும் பெரிய பங்களா பாரு!”

“அறிவில்லாமப் பேசாதல. நீங்கள்ளாம் எனக்கு பிள்ளைங்கனால், நம்ம வயலும், தோட்டமும் எனக்கு, என்னைப் பெத்த அப்பா—அம்மா மாதிரி. உனக்கு அது வெறும் மண்ணா தெரியலாம்... ஆனால், எனக்கு அது பூமாதேவி... என்னை சின்ன வயசிலே தாங்கிக்கிட்ட முத்துப்பல்லாக்கு. இதே மாதிரிதான், இந்த வீடும். உனக்கு என்னமோ, இது மண் சுவரும் பனை ஓலையுமாய் தெரியலாம். ஆனால், எனக்கு இதுதான் உயிரு. என் மவராசாவும், நானும் கொஞ்சி குலாவுன கோயில் இது! நீங்கல்லாம் பிறந்த இடம் இது! அதோ நிக்குதே வேப்பமரம், அதுதான் ஒங்களோட தொட்டில தாங்கின சீதேவி... இதெல்லாம் விட்டுட்டு மெட்ராசுக்கு வாரதை என்னாலே நினைச்சுகூடப் பார்க்க முடியாது!”

“நீ நினைக்காண்டாம். அப்படி நினைக்கிற என்னையாவது போகவிடேன்!”

“என்ன விட்டுட்டு உன்னாலே இருக்க முடியுமாடா?”

“நீ ஒன் அம்மாவை விட்டுட்டு, இந்த வீட்டுக்குக் கல்யாணமாகி வந்தியே... அப்புறம் அந்த வீட்டைப்பத்தி நெனச்சியா... அதுமாதிரிதான் எல்லாம். ஒரு மாசத்துக்கு மெட்ராசிலே உன்னைப் பார்க்க முடியலியேன்னு கஷ்டமா தான் இருக்கும். அப்புறம் சரியாயிடும். சரி, இன்னிக்கே நான் போகப்போறேன்! அண்ணன் இன்னோர் ஆள் பேருக்கு அம்பது ரூவா அனுப்பி என்கிட்டே கொடுக்கச் சொல்லியிருக்கான். அவர் பணமும் கையுமாய் நிக்கிறார்.”

தில்லையம்மா தள்ளாடினாள்; அவனைத் தளர்வோடு பார்த்தாள்; ஐம்பத்தைந்து வயதில், கறுப்புப் புடவையில், ‘பட்டரைச் சட்டம்’ போல் படர்ந்த உடம்பும், குவிந்த முகமும், விசாலமான மார்பும், நீண்ட கை கால்களுமாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/110&oldid=1368490" இலிருந்து மீள்விக்கப்பட்டது