பக்கம்:இன்னொரு உரிமை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120சு. சமுத்திரம்

ஆட்டிக்கொண்டு போவதைப் பார்த்து அசந்தது. ஒரு வண்டியில் கழுத்தைக் கொடுத்திருந்த இரண்டு மாடுகளை அந்த வண்டியிலிருந்தவன் சாட்டைக் கம்பால் விளாசுவதைப் பார்த்துவிட்டு அதிர்ந்தது. ஒரு பன்றியை யாரோ ஒரு பயல் பெரிய கல்லைத் தூக்கி எறிய அது அவலச் சத்தம் எழுப்பிக்கொண்டே ஓடுவதைப் பார்த்து தானும் ஓடப்போவதுபோல் கால்களைக் குவித்தது. இதற்குள் எதிரே தென்பட்ட கூட்டில் நடுப்பகுதியில் ஒரு ஓரமாக சாய்ந்து கொண்டு தன்னையே பார்த்த அவளை விட்டுப்போகவும் அதற்கு மனமில்லை. காடு சுதந்திரமானது என்றாலும், அந்த சுதந்திரத்தை அருமைக் காதலிக்காக விலையாய்க் கொடுக்கலாம் என்பது போன்ற ஒரு காதல் வேகம். கிருஷ்ணனைப்போல் கூண்டுக்குள்ளே பிறந்த காதலியுடன் கூட்டாக இருக்க வேண்டும் என்ற ஒரு ஆசை.

அந்தக் காட்டுப்புறா அதற்குப் பிறகு எதுவுமே யோசிக்கவில்லை.

ஆகாயத்திலிருந்து நேராக தரையிறங்கியது. லாடம் அடிப்பதற்காகக் கிடத்தப்பட்ட மாட்டை நோட்டம்விட்டுக் கொண்டே முதலிரவுக்குப் போவதுபோல் மெல்ல மெல்ல நடந்தது. கூட்டை நெருங்கியதும் ஒரே குதியாய்க் குதித்து காதலி இருந்த தட்டில் போய் நின்றது. ஆனந்த அதிர்ச்சியில் சிறிதுநேரம் ஒலியற்று நின்ற பெண் புறா ஆனந்தமாய்க் குதித்தது. காதலனின் கழுத்தை தனது அலகால் கோதிவிட்டது. பிறகு என்னையும் அப்படியே இயக்கு என்பதுபோல் அதையே பார்த்தது. பயந்து நடுங்கிக்கொண்டிருந்த அந்த ஆண் புறா இப்போது எல்லாவற்றையும் மறந்து ஒன்றை மட்டும் நினைத்தபடி சத்தம் எழுப்பியது. கும்மாளம்மா வந்து அந்தக் கதவைப் பூட்டினாலும் அந்த பாதிப்பைப்பற்றி கவலைப்படாமல் அந்தச் சிறையையே ஒரு சிங்காரச் சோலையாய் நினைத்து சத்தம் எழுப்பியது. எழுப்பிக்கொண்டேயிருந்தது.

‘கெக்கெக்... கெக்கெக் கெக்கே...’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/129&oldid=1372930" இலிருந்து மீள்விக்கப்பட்டது