பக்கம்:இன்னொரு உரிமை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4  சு. சமுத்திரம்

"ஒன் முகத்த முழுசா பார்க்கதுக்காவது கண்ணாடிய மாத்தணும். பட்... இந்த பவருக்குமேல கண்ணாடியே கிடையாதாம். இந்தச் சனியன சும்மா மூக்கும் காதும் வெறுமனே சுமந்திட்டு இருக்கு."

"இனிமேல் வாக்கிங் கீக்கிங்கின்னு போமாட்டிங்களே? கச்சேரி அரட்டைன்னு சுத்தமாட்டீங்களே!"

"படிப்படியா குறைச்சுடுறேம்பா! படிப்படியா என்ன இப்பவே, இந்த நிமிஷத்துலயே உன் பார்வை படுற இந்த தெருவையே குறுக்கும் நெடுக்குமா நடப்பேன். வெள்ளிக் கிழமை மட்டும் மயிலை கபாலீஸ்வரன் கோவிலுல நம்ம அப்பனையும் அம்மனையும் பார்க்க அலோ பண்ணணும்."

"ஒங்கள ரொம்பத்தான் முடக்கிப் போடுறேனோ... செயிலுல வைக்கதுமாதிரி வைக்கேனா."

"இல்லப்பா... நீதான் என் கபாலிச்சரம்! நீதான் என் அம்மன்! நீதான் என் வாக்கிங் ஸ்டிக்! நிசமாத்தாம்பா சத்தியமாப்பா."

தாத்தாவும் பாட்டியும் ஒருவரை ஒருவர் மோவாய்கள் உரசும்படி சொல்லி வைத்தது போல் பார்த்தார்கள். எழுபது வயது தாத்தா அறுபதைத் தாண்டிய பாட்டியை நாற்பதாண்டுகளுக்கு முன் நிறுத்திப் பார்த்தார். அந்தப் பார்வையோடு பார்வையாக, அந்தக்கால கண்ணாடியில் பார்த்துக் கொண்ட தனது முகத்தையும் கண்ணாடி இல்லாமல் பெருமிதமாகப் பார்த்த தன் உடம்பையும் இப்போது அவை மாறாது இருப்பதுபோல் அனுமானித்தபடியே பாட்டியைப் பார்த்தார், பயித்தங்காய் போன்ற கலையம்ச விரல்கள் முக்கால் வட்டமாகவும், கால் செவ்வகமாகவும் உள்ள உருண்டு திரண்ட வித்தியாசமான அதேசமயம் அழகான முகம். இதோ சிரிக்கப்போகிறாள்... என்பது மாதிரியான உதட்டுக் குவியல். பேசப்போவது சரியாய் இருக்குமா என்பதுபோல் அங்குமிங்குமாய் பார்க்கும் குழந்தைத் தோரணை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/13&oldid=1369481" இலிருந்து மீள்விக்கப்பட்டது