பக்கம்:இன்னொரு உரிமை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126சு. சமுத்திரம்

டெலிவிஷனில் சினிமாப்படத்திற்கு இடையில் செய்தியைப் பார்ப்பவர்கள் முகம் சுழிப்பதுபோல் மூன்று மாதகாலமாக வாழ்வில் சுழித்த அவனுக்கு மீண்டும் இன்னொரு ‘அட்வென்சர்’ கிடைக்கப்போகிற ஆனந்தம். போர்வையை மடித்து வைத்துவிட்டு, போகிறவளையே மனதில் உருவகித்தான். மஞ்சள் சிவப்பு; சற்று உயரம்; பரவாயில்லை. மடியாத சதைப்பிடிப்பு உயரத்தைக் குறைத்துக்காட்டி அழகைக் கூட்டிக் காட்டுகிறது. சொல்லுக்குச் சொல் ‘அவர் அவர்’ என்றாளே பரவாயில்லை... அந்த ‘அவர்’ சொல்லும் பல பெண்களின் சங்கதிகள் தெரிந்ததுதானே! அவர் என்பது ஒரு கேடயம்... கேடயம் போர்க்களத்தில்தான் போடப்படும். ஆயுள் முழுதும் உணர்ச்சியில் போராடும் பெண்கள் உச்சரிக்கும் கேடய வார்த்தைதான் ‘அவர்’. பல ‘இவர்களை’ மறைப்பதற்காக ஒரு ‘அவர்’ அவ்வளவே.

சேகர் திருப்தியோடு அசுரத்தனமான அமைதியோடு ஒரு செய்திப் பத்திரிகையைப் புரட்டினான். வாரப் பத்திரிகை ஒன்றைப் புரட்டினான். சிறுகதை ஒன்றைப் படித்தான். அதைப் படித்து முடித்ததும், அப்போது அவள் வீட்டுக்கு ஓட வேண்டும்போல் தோன்றியது.

இரவு மனைவியோடு பேசுகையில், வேண்டா வெறுப்பாகச் சொல்லி வைத்தான். கண்டவர்களை எல்லாம் கண்ட நேரத்துக்கு, வரும்படிச் சொல்லி கண்டபடி பேசலாகாது என்று தன் கண்கண்ட மனைவியிடம் சொல்லி வைத்தான். “பாவம்! அவள் ரொம்ப நல்லவள். அவளோட ஹஸ்பெண்ட் எப்பவும் டூர்ல. இருப்பார். வீட்டுக்கு வந்தால் டூர்ல இருந்துவந்த களைப்புல இருக்காராம்! இப்போ நான் தான் அவளுக்கு ஆறுதல்” என்று மனைவி சொல்லி முடித்ததும், “அவளுக்கு நீ ஆறுதல்... ஒனக்கு நான் ஆறுதல் ஆளப்பாரு! தொணதொணன்னு பேசிக்கிட்டு தூங்கவிடு” என்று சொன்னான். தூங்காமலே இரவைக் கழித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/135&oldid=1388275" இலிருந்து மீள்விக்கப்பட்டது