பக்கம்:இன்னொரு உரிமை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரம்புமீறிகள்143


மீண்டும் தாய்-மகள் சொற்போர். சொற்போர் என்பதைவிட ஒருவிதமான கெடுபிடிப்போர்.

"போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெயிண்ட் கொடுக்கிறதுல என்னம்மா தப்பு?"

"தட்பு கம்ப்ளெய்ண்ட்ல இல்ல! போலீஸ்ல இருக்குது! கோர்ட்ல இருக்குது! இந்தச் சமுதாய அமைப்புல இருக்குது!"

"தட்டிக் கழிக்கணு முன்னா எனத வேணு முன்னாலும் தட்டிக் கழிக்கலாம்."

"ஒனக்கு பட்டறிவு போதாது. அதனால தான் இப்படிப் பேசுறே! போலீஸ்ல புகார் கொடுத்தால் மொதல்ல அவங்க கேட்கிற கேள்விகளே கற்பழிக்கப்பட்டதைவிடப் பயங்கரமா இருக்கும், உடலுக்குப் பதிலா உள்ளத்தையே கற்பழிச்சுடுவாங்க. அப்படியே அவங்க நடவடிக்கை எடுத்தால்... எடுத்தால்... என்ன. எடுக்கலாம். ஏன்னா , அவங்களுக்கும் பொண்ணுங்க இருக்குமே. அந்தச் சண்டாளப்பயலைக் கைது செய்து லாக்கப்புல வைக்கிறதாய் அனுமானம் செய்துக்கோ! இப்படிப்பட்ட வழக்குக்கு, ஜாமீன் கொடுக்கத் தான் கோர்ட் இருக்கே! கோர்ட்டுல அந்தப் பாவிப்பயல் மட்டுமா கூண்டுல நிற்பான். நீயும் நிற்கணுமே... அவன் வக்கீல், - நீதான் அவனை ஒன் வலையில சிக்க வைக்கப் பார்த்தேன்னு கேட்டால்... இல்லன்னா நீண்ட நாள் பழக்கத்தில அவன் அப்படிச் செய்தான், அன்றைக்குன்னு கட்டுன மனைவி பார்த்துட்டாள். அதனால் நீ பயந்துட்டேன்னு அடிச்சுப் பேசுவான். அவன் பொண்டாட்டியும் புருஷனுக்கு சாட்சி சொல்லுவாள். இந்த ஏழை தமிழாசிரியை என்ன செய்ய முடியுமம்மா?"

"ஒங்களால் முடியும்! மதுரையை எரித்த கண்ணகியைப் பற்றிப் பேசுறதை நிறுத்த முடியும். 'நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே' என்று சூளுரைத்தானாமே நக்கீரன்.-- அதனைப் பற்றிப் பாடம் நடத்தாமல் இருக்க முடியும்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/152&oldid=1376325" இலிருந்து மீள்விக்கப்பட்டது