பக்கம்:இன்னொரு உரிமை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரம்புமீறிகள் 145

“படக்கூடாதுன்னு நினைக்கிற சமுதாயம் இது. ஒன் பெயர் பேப்பருல வந்தால், நீ ஒரு போராட்டக்காரின்னு படிக்கிறவன் நினைப்பான். ஆனால், ஒன்னைக் கட்டிக்க வரவன் அப்படி நினைக்கமாட்டான். நீதான் ஏதோ செய்யக் கூடாத தப்பைச் செய்ததாய் நினைத்து ஓடிப்போயிடுவான். அப்புறம் நீ அந்த மணிமேகலை மாதிரி காலமெல்லாம் கன்னியாய்... இப்பவாவது புரியுதாம்மா!”

இசக்கியா பிள்ளை அபிராமி அந்தாதியை அங்குமிங்குமாய் ஆட்டியபடியே ஒட்டுக் கேட்டார். மகளுக்கு அம்மா சொல்வது புரிந்துவிட்டதுபோல் தோன்றியது. அவளிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. அபிராமிவல்லி ‘அவள்’ மூலம் அவளுக்கு உபதேசித்துவிட்டாள். “அம்மா தாயே! தயவே... என் மகளுக்கு நல்ல புத்தியைக் கொடு.”

இசக்கியா பிள்ளை அந்த அந்தாதியின் ஒரு பகுதியைப் படித்துவிட்டு, நாளை விட்ட இடத்திலிருந்து தொடர்வதற்காக ஒரு மல்லிகைப்பூவை, படித்த-படிக்காத பக்கங்களுக்கு இடையில் வைத்துவிட்டு தேவாரத்திரட்டை எடுத்து ‘வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டனை’ ஞானசம்பந்தரின் கோளறு பதிகத்தில் ஓசைப் பிழையின்றி அட்சர சுத்தமாய்ப் பாடினார். பாடிக்கொண்டே இருந்தார். பிறகு அப்பர் அருளிய பகுதிக்கு வந்தார்.

“நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம்.”

வெளியே இப்போது அஞ்ச வைப்பது போன்ற வார்த்தைப் பிளிறுகள்... இந்திரா, ஏதோ ஒரு நாற்காலியை உடுக்காக்கி, காலடி தரை மோதிச் சத்தம் எழுப்ப ஊழிக் கூத்தாய்—காளிக் கூத்தாய் சாடிக்கொண்டிருந்தாள்.

“பெண்மைக்குக் களங்கம் வரக்கூடாது என்கிறதுக்காகப் போராடுற என்மேல் களங்கம் நினைக்கிற எந்தப் பயலும் எனக்கு வேண்டாம். கல்யாணம் என்கிறது ஒருத்த-

சி.-10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/154&oldid=1369555" இலிருந்து மீள்விக்கப்பட்டது