பக்கம்:இன்னொரு உரிமை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150  சு. சமுத்திரம்

 தாக நினைத்து அறை முழுதும் மொய்த்த நோயாளி கும்பல் அவளைப் பார்த்து முனங்கின. அதைப் புரிந்து கொண்ட சுலோச்சனா, வரிசையின் வால்பக்கம் வந்து அமர்ந்தாள்.

சுலோச்சனா அங்கிருந்த நோயாளிகள் கூட்டத்தை நோட்டமாய் பார்த்தாள். இந்த வயதிலும் கண் துல்லியமாகத் தெரிவதில் அவளுக்கு சந்தோஷம். அதோ அந்த சிறுமி மாதிரிதான் என் கீதாவும் ஒடுக்கு துணிப்போட்டு இருமுவாள். இதோ இந்த பயல்மாதிரிதான் சுரேஷும் 'மெட்ராஸ்' ஐ தாங்கமுடியாமல் ஊளையிட்டான்.

சுலோச்சனா காத்திருந்தாள்.

உள்ளே கீதா பேசப்பேச இவளுக்கு மகிழ்ச்சியாக இருத்தது. "வயதானவர்களுக்கு உடல் வலி வருவது முதுமையின் இயல்பு என்று டாக்டர்கள் சொல்வது மூடத்தனம். மனித உடம்பில் எந்த வயதிலும் வலியில்லாமல் ஜீவனுடன் இருக்க நவீன மருந்துகள் இருப்பதைத் தெரிந்து கொள்ளாததால் ஏற்பட்ட அறியாமை. இதைத் தான் நான் கான்ப்ரன்ஸில் பேசப்போறேன்" என்று கீதா ஆங்கிலத்தில் வெளுத்துக்கட்டியது. சுலோச்சனாவிற்குப் பெருமையாக இருந்தது. உள்ளே இருப்பவர்கள் வெளியே வந்ததும், உடனடியாக கீதாவைப் பார்த்தாக வேண்டும்; தான் சொல்லப்போகிற நல்ல செய்தியைக் கேட்டு, கீதா முகத்தில் படரும் மகிழ்ச்சியை ரசிக்க வேண்டும்... சும்மா சொல்லக் கூடாது. கீதா நல்ல ரசனைக்காரி, நல்ல செய்தியைக் கேட்டதும் அல்லிப்பூ விரிவதுபோல அவள் முகம் விரியும்.

சுலோச்சனாவிற்கு இருப்புக் கொள்ளவில்லை. உள்ளே இருந்த டாக்டர்கள் அறுத்துக்கொண்டிருப்பதில் அவளுக்குக் கோபம். அந்த மகிழ்ச்சியான செய்தியை பிரசவ வலிபோல் தாங்கிக்கொண்டாள். நல்லவேளையாக உள்ளேயிருந்து உதவிப் பையன் வந்தான். எல்லா கிளினிக்குகளிலும் அலட்டலாக இருப்பான்களே, அப்படிப்பட்ட பையன்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/159&oldid=1369306" இலிருந்து மீள்விக்கப்பட்டது