பக்கம்:இன்னொரு உரிமை.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168சு. சமுத்திரம்


‘ஆமாம். இனிமேல் பீடிதான் சுத்தணும். பழகிட்டா, ஒரு நாளைக்கு முப்பது வண்டல் சுத்தலாம் (வண்டல் என்றால் ஆங்கில பண்டில்), மொத்தம் வயல் வேலையில் கிடைப்பதைவிட அதிகந்தான் கிடைக்கும். நைலக்ஸ் புடவ கட்டலாம். அதுவும் முன் கொசுவத்துல. ஒரு கைக் குட்டையை இடுப்பில வச்சிக்கிடலாம். ஆடாம அசையாம இருந்த இடத்தில இருந்தபடியே சம்பாதிக்கிற வேல. வயக் காட்டு சகதியில புரளாண்டாம். வாய்க்கால் மண்ணுல பல் தேய்க்காண்டாம். நிழலுலயே இருக்கலாம். அப்போதான் வெயிலுல வேலபாத்து வேலபாத்து கறுப்பாப்போன என் சிவந்த உடம்பு... ரத்தச் சிவப்பா மாறும். தண்ணில நின்னு நின்னு அழுகுனது மாதுரி ஆன இந்தக் காலு சும்மா கலர் செருப்புமாதிரி மின்னும்.

பீடி சுற்றிப் பழக, எப்படியும் பதினைந்து நாள் ஆகும் அதுவரைக்கும் சீனியம்மாவால் வேலைக்குப் போகாமல் வெறும் பயிற்சியிலேயே நாளைக் கடத்த முடியாது அறுவடைக் கூலியாய் கிடைத்த பத்து மரக்கால் நெல்லில், மழைகாலத்தில் வாங்கிய கடனுக்கு வட்டியாக மூன்று மரக்காலும் அசலுக்கு முதல் தவணையாக இரண்டு மரக்கால் நெல்ல வித்து அம்மாவுக்கு ஒரு சேலையும், அய்யாவுக்கு ஒரு வேட்டியும் வாங்கியாச்சு. மெட்ராஸ்ல மளிகக் கடையில வேலபாக்குற தம்பி பணம் அனுப்புவான்னு நம்பி, இருந்தத வித்தாச்சு. அவன் என்னடான்னா ஒரு ‘வாச்சி’ வாங்கியாச்சுன்னு எழுதுறான். மொத்தத்தில் வேலைக்குப் போனால் தான் சாப்பாடு.

அவள் தட்டுத்தடுமாறி வயல் வேலைக்குப் போனாள்.

சீனியம்மை வேலைக்குப் போய்விட்டுத் திரும்பியதும் அம்மாவை கன்றுக்குட்டிக்குப் புல் போடச் சொல்லிவிட்டு, காலையில் தோளில் வைத்துச் சுமந்துகொண்டுபோன மண்வெட்டியை மாலையில் அருவருப்பாகப் பார்த்துக்கொண்டே கீழே போட்டுவிட்டு, வேப்பமரத்தடிக்கு வந்து மின்சார

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/177&oldid=1368913" இலிருந்து மீள்விக்கப்பட்டது