பக்கம்:இன்னொரு உரிமை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிசமான பத்தினி173

போன பெண்கள் இப்போது கணக்கனைப் பகைச்சால் கழிவு பீடிதான் கிடைக்கும் என்ற புதுமொழியை நினைத்து கடையிலேயே நின்றார்கள்.

வேப்பமரத்தடியில் தன்னந்தனியாக உட்கார்ந்து இலைகளை வெட்டிக்கொண்டிருந்த சீனியம்மையைப் பார்த்து, முகங்களை வெட்டிக்கொண்டே அந்தப் பெண்கள் வந்து உட்கார்ந்தார்கள். யாரும் அவளோடு பேசவில்லை. அவர்கள் கைகளில் பீடி ஆடியதே தவிர முகங்களில் ஈயாடவில்லை. சீனியம்மை அவர்கள் திட்டியிருந்தால்கூட அப்படித் தவித்திருக்கமாட்டாள். தாள முடியாமல் கேட்டாள்.

“என்னடி பேச மாட்டக்கிய? நான் என்ன தப்புப் பண்ணிட்டேன்?”

மெளனம்.

“வாயத் திறந்து சொல்லுங்கடி...”

ஒருத்தி வாயைத் திறந்தாள்.

“ஒன்னால எங்களுக்குக் கெட்ட பேரு... ஆயிரந்தான் இருந்தாலும் நீ கணக்குப்பிள்ளய அப்படிக் கேட்டிருக்கப் படாது!”

“ஒரு வாரத்துக்கு முன்னால அவன் கையைப் பிடிச்சான்னு சொல்லும்போது நீங்க அவனை ஏன்னு கேட்டிருந்தால் நான் பேசியிருக்கமாட்டேன்!”

“அப்போ சும்மா இருந்தவளுக்கு இப்போ ஏண்டி முகம் கோணுது?”

“ஆயிரந்தான்னு சொல்றியே... அந்த ஆயிரத்துக்கு என்னடி அர்த்தம்? அவன் என்னை என்ன பண்ணுனாலும் சும்மா இருக்கனுமுன்னு சொல்றியா? அச்சடிப் புடவைக்கும். ஆயிரம் சொகுசுக்கும் இப்பதான் அர்த்தம் புரியது!”

கூட்டத்தில் ஒரு ரோஷக்காரி சீறினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/182&oldid=1369300" இலிருந்து மீள்விக்கப்பட்டது