பக்கம்:இன்னொரு உரிமை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174சு. சமுத்திரம்


“இந்தா பாரு சீனி... நீ பாட்டுக்கு சகட்டு மேனிக்குப் பேசுறது நல்லா இல்ல. நீ மட்டும் பத்தினி! நாங்க தட்டு வாணி முண்டயுவ மாதுரி பேசாதா என் கிட்ட அவன் அப்படி நடந்ததே கிடையாது.”

சீனியம்மை சிறிது நிதானப்பட்டுப் பேசினாள். “நான் அந்த அர்த்தத்துல சொல்லை... நீங்க எல்லோரும் அப்படிப்பட்டவளுக இல்லன்னும் தெரியும். ஆனால் ஒன்கிட்ட அந்தப் பய வாலாட்டாம இருக்கதுக்கு நீ மட்டும் காரணமில்ல. ஒன் அண்ணன் தம்பிங்க... அவன் பல்ல எண்ணிடு வாங்கங்ற பயமும் ஒரு காரணம். ஆனால் நான் அனாத மாதுரி. என்னை என்ன பண்ணுனாலும் யாரும் கேக்க மாட்டாங்க என்கிற அகம்பாவம் அவனுக்கு...”

சீனியம்மை இப்போது ஆவேசம்மையாகி, மேலும் விளாசினாள்.

“தன்னோட ஒழுக்கத்த மட்டும் காக்கிறவள் பத்தினியாகிட மாட்டாடி. இன்னொருத்தியை ஒருவன் முற கெட்டத்தனமாகப் பார்க்கையில சீறுறாள் பாரு. அவ தான் நிசமான பத்தினி. என்னோட கையக் கால அவன் பிடிச்சாலும் பீடிக்காக சகிச்சிக்கிட்டு இருந்தீங்க பாரு... அதுவே தேவடியாத்தனந்தான். மொதல்ல ஒங்கள மாதுரி பொம்புளங்கள ஒதச்சா, இந்த மாதுரி ஆம்புளைங்க சரியா யுடுவாங்க... பரவாயில்ல. அந்தக் கணக்கப்பிள்ள பய செருப்படி படுற காலம் வராமப் போகாது!”

சொல்லி வைத்ததுபோல், சில வாயாடிப் பெண்கள் அவளைத் திட்டப் போனார்கள். இதற்குள் சீனியம்மை எழுந்து இலைத் தட்டை அங்கேயே போட்டுவிட்டு தன் வீட்டுக்குப் போனாள். கால்மணி நேரத்திற்குள்―

கையில் ஒரு களை வெட்டியுடன், இன்னும் காய்ப்புகள் மாறாமலே இருந்த உள்ளங்கைகளை விரித்து அவற்றைக் கம்பீரமாகப் பார்த்துக்கொண்டே வயக்காட்டைப் பார்த்து நடந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்னொரு_உரிமை.pdf/183&oldid=1369308" இலிருந்து மீள்விக்கப்பட்டது